125x125 Ads1

125x125 Ads1

Friday, January 28, 2011

அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி

மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

இறைவன் தன் அடியார்கள் எப்படித் தன்னை வணங்கி வழிபட வேண்டும் என்று கோருகிறான் என்பதைப் குர்ஆன் விரிவாக விளக்குகிறது. தொழுகை, வணக்க வழிபாடு, கடமையாக்கப்பட்ட ஈகை, போன்றவற்றைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு குர்ஆன் பதில் அளிக்கிறது. இறை நம்பிக்கையாளருக்கு உரிய பண்பாடுகள் பற்றி மட்டும் கூறுவதோடல்லாமல், இறை நம்பிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டியவை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், ஆகிய யாவும் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றன. தன்னடக்கம், தியாக மனப்பான்மை, நேர்மை, நீதி, இரக்கம், சகிப்புத்தன்மை, உறுதி மற்றும் இவை போன்ற ஒழுக்கச் சிறப்பியல்புகள் இறைவனின் நல்லடியாளர்களிடம் அமைய வேண்டிய பண்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இறை நம்பிக்கையாளர்கள் இவற்றைக் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் இறைவன் ‘ஒன்றுமில்லாமை’ யிலிருந்து படைத்தான். உயிரினங்களில் மனிதன் குறிப்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறான். அவற்றுள் மிக முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது ‘ஆன்மா’ ஆகும். இதுதான் மனிதனை உணர்வுடையனாக்குகிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானவை எனில் அவற்றை மனிதன் எண்ண ஆரம்பித்தால் அவனால் எண்ணி முடிக்க முடியாது, என்று இறைவன் அறிவிக்கின்றான். (அந்நஹல்:18). எனவே மனிதன் இந்தச் சலுகைகள் எல்லாம் தனக்கு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் பிரதிபலனாக இறைவன் மனிதனிடம் கோருவது என்னவென்பதையும் ஆலோசித்து அறிய முற்பட வேண்டும்.

அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயனளிப்பவற்றை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வறண்டு காய்ந்த பூமியை செழிப்படையச் செய்ய வானத்திலிருந்து இறைவன் பொழியச் செய்யும் மழையிலும், எல்லாவிதமான படைப்பினங்களையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்று வீசும் பல திசைகளிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் (நல்ல நோக்கங்கள் நிறைவேற உதவும்படி) நிலைபெற்றிருக்கச் செயதிருக்கச் செய்திருக்கும் கருமேகத்திலும் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக சான்றுகள் இருக்கின்றன. (2:164)

தான் நுகரும் எல்லாச் சலுகைகளும் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதை உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன் மனிதன். எனவே தான் இறைவனுக்கு நன்றியுள்ளவனாக விளங்கவேண்டும் என்பதை உணர்ந்தவனாக மனிதன் விளங்குகின்றான். ஆனாலும் அந்த நன்றியுணர்வு எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியமாட்டான். இதிலும் மனிதனுக்கு வழிகாட்டுகிறது குர்ஆன்.

குர்ஆனில் இறைவன், மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காரியத்திற்கும் தன் அனுமதியைப் பெற வேண்டுமென்று கோருகிறான். மனிதனுடைய வாழ்வில் ஒவ்வொரு கணமும் இறைவனுடைய விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமேயல்லாது தன்னுடைய விருப்பத்திற்கும் இச்சைக்கும் ஏற்ப செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் தன் இச்சைக்கு அடிமையாகி விடுவான். ( 25:43)

தன் இச்சையை தன்னுடைய இறைவனாக எடுத்துக்கொண்டிருப்பவனை பார்த்தீருக்கிறீரா?

இறைவனின் இந்த எச்சரிக்கைக்குச் செவி சாய்த்து, இறை நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை நிறைவேற்ற பலவழிகள் தோன்றும்போது, இறைவனின் திருப்தியைப் பெற்று தரும் வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பான்; அஃதொரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கருத்தாகவோ மனப்பான்மையாகவோ இருந்தாலும் சரி.

இதன் விளைவாக, தன் இறைவனின் திருப்தியைப் பெறும் வகையில் தன் வாழ்நாளில் எல்லா நடவடிக்கைககளையும் மேற்கொள்ளும் இறைநம்பிக்கையாளன் என்றும் அழியாத பேறுகளை அடைய அருகதை உடையவனாகிறான். எனவே,மனிதன் இறைவனின் அடிமையாக இருப்பதன் மூலம் தனக்கே பலன் தேடிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.

இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன். (29:6)

மனிதனுடைய வணக்க வழிபாடுகளும் நல்ல நடவடிக்கைகளும் எல்லாம் இறைவனுக்குத் தேவையே இல்லை. குர்ஆன் இதனை, அல்லாஹ் என்றுமே தேவைப்படாத வளமிக்கவன்

Sunday, January 9, 2011

கப்ர் - மண்ணறை விசாரணை!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அவை போன்றே மனிதன் மரணித்தப் பின்னர் அவர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!
மறுமையின் முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம், நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை அவை மனிதனின் புலன்களுக்கு எட்டா தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைபாடு!
மரணித்த மனிதரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், ரஸுலல்லாஹ்வும் அறிவித்த சில செய்திகளை, சில சிறு பகுதிகளாக இந்த இழையில் பார்ப்போம்.
************************
எவர்கள் நமது வசனங்களைப் பொய்பித்து அவற்றை விட்டும் பெருமையடிக்கிறார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் 7:40)
இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ் தான் நாடுவதைச் செய்வான். (அல்குர்ஆன் 14:27)
அல்லாஹ்வுக்காக நேரிய வழியில் நின்றவர்களாகவும், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காதவர்களாகவும் (அவனை வழிபடுங்கள்) யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவர் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவரைப்போல் அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துச் சென்றவரைப் போல் ஆவார். (அல்குர்ஆன் 22:31)
ஆகவே, தீயோர்களின் பதிவேடு ''ஸிஜ்ஜீனில்'' இருக்கின்றது. (அல்குர்ஆன் 83:7)
ஆகவே, நல்லோர்களின் பதிவேடு ''இல்லிய்யீனில்'' இருக்கின்றது. (அல்குர்குர் 83:18 மேலும், திருக்குர்ஆன் 83வது அத்தியாய வசனங்களை வாசிக்கவும்)
நபிமொழி
அன்ஸாரிகளில் ஒருவரின் இறுதிக் கடனை (ஜனாஸா) நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.
பின்னர், தமது தலையை உயர்த்தி அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள் என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:
இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், ''தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக'' என்பார்.
அப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.
பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ''இந்தத் தூய உயிர் யாருடையது?'' என்று கேட்பர். அதற்கு அவர்கள், ''இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதர்'' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகானப் பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமிக்கு அருகிலிருக்கும் (முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.
அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திருக்கும் இறை நெருக்கம் பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், ''என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) 'இல்லிய்யூன்' எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் பூமிக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை (மனிதர்களை)ப் படைத்தேன், அதிலேயே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்'' என்று கூறுவான்.
பின்னர் அவரது உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், ''உம்முடைய இறைவன் யார்?'' என்று கேட்பர். அதற்கு, ''என் இறைவன் அல்லாஹ்'' என்று அவர் பதிலளிப்பார். அடுத்து. ''உமது மார்க்கம் எது?'' என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ''எனது மார்க்கம் இஸ்லாம்'' என்று அவர் கூறுவார்.
பிறகு ''உங்களிடையே அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?'' (முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி)அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ''அல்லாஹ்வின் தூதர்'' என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் ''அது எப்படி உமக்குத் தெரியும்?'' என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், ''நான் அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை)ப் படித்தேன், அதன் மீது நம்பிக்கை கொண்டேன், உண்மையென ஏற்றேன்'' என்று கூறுவார்.
உடனே வானிலிருந்து ஓர் அறிவிப்பாளர், ''என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்'' என்று அறிவிப்பார். (அவ்வாறே செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, ''உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும், இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்'' என்'பார்.
அப்போது அவர் அந்த அழகான மனிதரிடம் ''நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே'' என்று கேட்பார். அதற்கு அந்த அழகான மனிதர், ''நான்தான் நீர் செய்த நற்செயல்'' என்பார். உடனே அவர் ''என் இறைவா! யுக முடிவு (நாளை (இப்போதே) ஏற்படுத்துவாயாக, நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்'' என்று கூறுவார்.
(ஏக இறைவனை) மறுக்கும் அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். ''மாசடைந்த ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பு மற்றும் கோபத்தை நோக்கிப் புறப்படு'' என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள் கம்பியை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.
உயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது மேற்பரப்பில் ஒரு பிணத்திலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள் அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ''இந்த மாசடைந்த உயிர் யாருடையது?'' என்று கேட்பர். அதற்கு அவர்கள், ''இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதர்'' என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமிக்கு அருகிலிருக்கும் (முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கச் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது.
இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள்.
பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ''அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழான பூமியிலுள்ள ''ஸிஜ்ஜீன்'' எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்'' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும். இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் ''யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அவர் வானத்திலிருந்து கீழே விழுந்தவர் போன்றவர் ஆவார். பின்னர் அவரைப் பறவைகள் கொத்தித் தூக்கிச் சென்றுவிடும். அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துச் சென்றுவிடும்'' (22:31) எனும் வசனத்தை ஓதினார்கள்.
பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், ''உம்முடைய இறைவன் யார்?'' என்று கேட்பர். அதற்கு அவர் ''அந்தோ எனக்கு எதுவும் தெரியாதே!'' என்று கூறுவார். அவ்விருவரும், ''உனது மார்க்கம் எது?'' என்று கேட்பர். அவர், அந்தோ எனக்கு எதுவும் தெரியாதே!'' என்பார். அடுத்து ''உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இந்த மனிதர் யார்?'' என்று (முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், அந்தோ எனக்கொன்றும் தெரியாதே!'' என்று பதிலளிப்பார்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அறிவிப்பாளர், ''என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள், அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்'' என்று அறிவிப்பார். நரகத்தின் வெப்பமும் கடும் உஷ்ணமும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து ''உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றை சொல்கிறேன் கேள், இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்'' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமான மனிதரிடம் ''நீர் யார்? உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!'' என்று கேட்பார் அதற்கு அந்த மனிதர், ''நான்தான் நீ செய்த தீய செயல்'' என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், ''என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே'' என்று கூறுவார்.
அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753,)
--