125x125 Ads1

125x125 Ads1

Thursday, August 25, 2011

உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு


இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ளMBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்சி பெற வேண்டும். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்டவகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.


மேலாண்மை படிப்புகள் படிக்க (MBA) மத்திய அரசால் உறுவாக்கப்பட கல்விநிறுவனம்தான் IIM (Indian Institute of Management ). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாரம்மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM-ல் படித்தவர்கள். மிக பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்க்கு உலகதரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னனிநிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது. CAT நுழைவு தேர்வில் எடுக்கும்மதிப்பெண் IIM மட்டுமல்லாமல் பிற அரசு மறும் தனியார் மேலாண்மை கல்விநிறுவனங்களிலும் MBA சேர்வதற்க்கு பயன்படுகின்றது.


CAT-2011 நுழைவு தேர்வை பற்றிய விபரம்


விண்ணப்பிகும் முறை : குறிபிட்ட Axis வங்கி கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கி, இந்த www.catiim.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வவுச்சர் கிடைக்கும் Axis வங்கி கிளைகளின் முகவரி இந்த இணையதளத்தில்www.catiim.in/axisbank_branch.html உள்ளது.


விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28


விண்ணப்பத்தின் விலை : ரூ.1,600


தேர்வு நடைபெறும் தேதி : இந்த தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும், விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.


தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :


1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.




இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27%இட ஒதுக்கீடு உள்ளது.


தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்


இந்த தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும். CAT தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation. இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning. ஓவ்வொரு தேர்வு எழுத 70நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15நிமிடம் தேர்வை பற்றி விளக்கப்படும்.


இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?


இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பொதுவாக எப்படி பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். இதற்க்காக பல்வேறு பயிற்சி மைய்யங்கள் தமிழகத்தில் உள்ளது,அங்கு சேர்ந்தும் பயிற்சி பெறலாம்.


இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு,காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்குஇத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறானசிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்கநம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்

Wednesday, August 17, 2011

லைலத்துல் கத்ர் இரவு

முன்னுரை:

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. சிறப்புகள்:

‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் 97:1-3)

சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.

2. அது எந்த இரவு?:

‘..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)

‘நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

‘லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

3. லைலத்துல் கத்ரை தேடுவது:

‘நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்’ இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

5. (இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:

‘நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்’. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

7. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي



பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!’

முடிவுரை:

லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!

Tuesday, August 9, 2011

எச்சரிக்கை - வீண் தர்க்கம் செய்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...


வீண் தர்க்கம் செய்தல்


ஹதீஸ் 1 :


”நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு, வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை” என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-அபூ உமாமா (ரலி)

-திர்மிதீ , இப்னுமாஜா





ஹதீஸ் 2 :


”ஒருவர் வீண் தர்க்கத்தை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் கீழ் பகுதியில் ஒரு வீடு கட்டித்தரப்படும்,ஒருவர் தகுதியானதாக இருப்பினும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் நடுவில் அவருக்காக வீடு கட்டப்படும். ஒருவர் தன் குணத்தை அழகாக்கி வைத்துக்கொண்டால் சொர்க்கத்தின் உயர்ப்பகுதியில் வீடு கட்டப்படும்.” என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-அபூ உமாமா (ரலி)
-அபூதாவூத் ,திர்மிதீ, இப்னுமாஜா,பைஹகீ


ஹதீஸ் 3 :


"அல்லாஹ்விடம் மனிதர்களில் அதிக கோபத்திற்குரியவர்கள் வீண் தர்க்கம் புரிவதில் கைதேர்ந்தவர்கள்தான் ”என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-ஆயிஷா (ரலி)

-புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ





ஹதீஸ் 4 :


"குர்ஆன் விஷயத்தில் தர்க்கம் புரிவது, இறை மறுப்புச் செயலாகும்.”என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-அபுஹீரைரா(ரலி)

-அபுதாவூத், இப்னுஹிப்பான்.







குறிப்பு : மேலும் விபரங்களுக்கு ஹதீஸ்களைப் பார்க்கவும்.

நாவைப் பேணுக!

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

Tuesday, August 2, 2011

நோன்பின் அவசியம்



ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

நோன்பின் நோக்கம்

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

நோன்பின் சிறப்பு

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது

அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா

நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)

பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்

மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)

“இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்

மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்

கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா

சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நோயாளிகள், முதியவர்கள்

நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி

நோன்பின் நேரம்

சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.

ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)

ஸஹர் உணவு

நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ

(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

விடி ஸஹர்

விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.

பசி முன்னிற்கும்போது

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

மறதியாக உண்பதும், பருகுவதும்

ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம் நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.

பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது

நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

இரத்தம் குத்தி எடுத்தல்

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: தாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி நூல்கள்: புகாரி

மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நோன்பு துறத்தல்

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்