125x125 Ads1

125x125 Ads1

Monday, December 12, 2011

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—

1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் ‘சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் ‘சதக்கா’ செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

Saturday, December 10, 2011

யார் கடவுள்…?

ஓரிறையின் நற்பெயரால்

இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. “கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.

இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.

இயற்கையா? இறைவனா?

இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் “அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?” என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.

அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை.

சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?

இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் “இயற்கை” அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது “தற்செயலாக” -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.

இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.

ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.

இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.

ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது “தற்செயல்” மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.

எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.

ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே “கடவுள்” என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?

யார் கடவுள்?

சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் “கடவுள்’ நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான்.

ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.

*கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.

*அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.

*எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.

*மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.

*மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது

*அவரை பற்றி முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

*மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் “அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து” அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

*எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்

*நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

*மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.

இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்

இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ “அவர் தான் கடவுள்”

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.