125x125 Ads1

125x125 Ads1

Friday, May 18, 2012

அழைப்புப் பணி

நன்மைகளின் பால் அழைப்பவன் அதைச் செய்பவன் போன்றவனாவான்.’ (நூல்: திர்மிதி-2662) அழைப்புப் பணி என்பது, நபிகளார் நம் ஒவ்வொருவரினதும் கரங்களில் ஒப்படைத்துச் சென்ற ‘அமானத்’ ஆகும். இதனையே நபி(ஸல்) அவர்கள் ஓரிலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது இறுதி ஹஜ்ஜின் அரபாப் பேருரையின் போது ”மக்களே நான் எத்தி வைத்து விட்டேனா? என இரு முறை வினவி, இறைவா நீயே சாட்சியாக இரு என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தின் பல்துறைகளையும் எடுத்துக் கூறி, வந்தவர் வராதவருக்கு எத்தி வைத்துவிடுங்கள் என்றதொரு அமானத்தையும் அந்த இடத்தில் கூறிவைத்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: புஹாரி-7078) அதனை மேலும் வலியுறுத்தும் விதமாக, ”என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு)செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றா னோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: புஹாரி-3461) நபி(ஸல்) அவர்களின் பிரச்சாரப் பணி முழுமை பெற்றதை இறைவன் ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)என்று இதனை மேலும் உறுதி செய்கின்றான். இப்பாரிய பணியை அனந்தரமாகப் பெற்ற ‘தாஈ’களே உலமாக்கள். இவர்கள்தான் நபிமார்களின் வாரிசுகள். இந்த ‘தாஈ’கள் வெறும் சடவாதிகள் அல்ல. உள்ளதை உள்ளபடி எத்திவைப்பதுதான் இவர்களது பணி. இதனையே அல்குர்ஆன் தெளிவாகப் பறைசாற்றுகின்றது ”அவர்களுக்கே அழ்ழாஹ் நேர்வழி காட்டினான். எனவே, அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 06:90) நபிமார்கள்தான் இவர்களது முன்மாதிரிகள். மனைவியாக இருந்தாலும், தந்தையானாலும், அரசியல்வாதிகளாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லி வைப்பார்கள். வெள்ளிமேடைகளில் ஒரு பத்வாவும், தனது குடும்பமென்றால் மற்றொரு தீர்ப்பும், தான் சந்திக்கும் அரசியல்வாதிகள் என்றால் ஒரு நியாயமும் காட்டவே மாட்டார்கள். நபிமார்களின் வாழ்வும் தியாகமும் இவர்களில் பிரதிபலிக்கும். இவர்கள் யாருக்கும் விலை போகமாட்டார்கள். சத்தியத்தை எடுத்துரைப்பதால் இத்தனை நாளும் தான் கட்டிக்காத்த கௌரவமும், கண்ணியமும் சரிந்து போவதை அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள். தோற்றத்தில் இந்த ‘தாஈ’கள் சற்று பலவீனர்களாகக் கூடத் தெரியலாம். புகழ்மிகு குடும்பப் பின்னணியும் இல்லாதிருக்கலாம். தஃவா களத்திற்கு வருகின்ற ‘தாஈ’கள் தனது தந்தையின் பெயரும், பதவியும் நான்கு பேர் மெச்சுகின்ற வண்ணம் அமைந்திருந்தால்தான் சத்தியப் பிரச்சாரம் செய்யமுடியும் என்பதில்லை. ஒரு ‘தாஈ’ சாதாரண கூலித்தொழிலாளியின், அங்காடி வியாபாரியின், ஏன் மார்க்கப் பின்னணியே இல்லாத பிச்சைக்காரனின் மகனாகவும் இருக்கலாம். மாறாக, தான் சொல்லும் செய்தியில் உண்மையும், உறுதியும் இருந்தால் அவனே உயர்ந்தவன். ஏழைக்கொரு சட்டம், பணக்காரர்களுக்கொரு பத்வா என்று யூதப் பாதிரிகள் சத்தியத்தை மறைத்தது போன்று துரோகம் செய்யவுமாட்டார்கள். ”தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக இது அழ்ழாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவோருக்குக் கேடுதான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.’ (அல்குர்ஆன் 02:79). இவ்வாறு அழ்ழாஹ்வின் சாபத்தை விட்டும் சத்தியத்தை சொல்கின்ற இந்த ‘தாஈ’கள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள். முன்வைக்கின்ற செய்தியிலும், நடைமுறைப்படுத்துவதிலும் இறையச்சமே இவர்களது இலக்கு. யாருடைய பாராட்டல், கரகோசங்களும் அல்லது விமர்சனங்கள், தூற்றல்களும் இவ் இறையச்சத்திலிருந்து இவர்களை இம்மியளவும் திசை திருப்பாது. ‘ ‘அழ்ழாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.’ (அல்குர்ஆன் 65:02) எந்த சந்தர்ப்பத்திலும் நீதி, நேர்மை தவறவேமாட்டார்கள். இறைத்தூதரின் ஒரு செய்தியை ஆழமாக நம்புவார்கள். ‘அநியாயக்கார அரசனுக்கு முன்பு சத்தியத்தை முன்மொழிவதே மிகச்சிறந்த அறப்போராகும்.’ (அறிவிப்பவர்: அபூ உமாமா(ரழி), நூற்கள்: அஹ்மத்-18446, இப்னுமாஜா-4009) எது நடந்தாலும் ‘மறுமை’ என்ற ஒன்று உண்டு அப்போது அந்த வல்ல நாயனின் தீர்ப்பே இறுதியானது என்ற உறுதி இந்த ‘தாஈ’களிடம் மிகைத்திருக்கும். மிம்பர்களில் நீதியையும், நியாயத்தையும் வெளிப்படுத்தாது விட்டால் இவர்கள் எப்படி ‘தாஈ’களாக இருக்க முடியும். பொய், புரட்டு, குரோதம் இவர்களிடம் இருக்கவே கூடாது. ஆனாலும், ‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை’ போன்று மிம்பர்களை அசிங்கப்படுத்தும் தாஈகளும் இல்லாமல் இல்லை. ‘நம்பிக்கை கொண்டோரே! அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அழ்ழாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அழ்ழாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 05:08) நீதி, நேர்மை இல்லாதவர்களிடம் இறையச்சம் இராது. இறையச்சம் இல்லாதவர்கள் நபிமார்களை முன்மாதிரியாகக் கொண்டு தஃவாவை எங்கே முன்னெடுக்கப் போகின்றார்கள். பொதுவாக ஒரு தாஈயானவர் தனது தஃவாப் பணியின் பிரதிபலன் மறுமையில்தான் என்பதை நம்ப வேண்டும். பதவி உயர்வுகளும், பதவி நீக்கங்களும் இந்த தாஈகளின் தஃவாவில் எப்பாதிப்பையும் ஏற்படுத்தாது. இறுதியாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய முனாபிக்கின் தன்மைகள் ‘தாஈ’களிடம் மருந்திற்குக் கூட இருக்கக் கூடாது. ‘ ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான். ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை மீறுவான். விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), நூல்: முஸ்லிம்-106) ஆகையால் மரணத்தையும், மறுமையையும் பயந்து வார்த்தையில் உறுதியும், வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தலும், இறையச்சமும் கொண்டு அழைப்புப் பணியை செவ்வனே செய்ய ‘தாஈ’கள் முன்வரவேண்டும். எல்லாம் வல்ல அழ்ழாஹ் நம் அனைவரையும் இறையச்சமுள்ள தாஈகளாக ஆகுவதற்கு துணை புரிவானாக!