125x125 Ads1

125x125 Ads1

Friday, July 29, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.




இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 27, 2011

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ?
என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா ? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.
இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35

தடையை மீறினார் வழி தவறினார்.

எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.

20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று
அந்த மரத்தின் கனி,
இன்று
மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

படிப்பினைகள்

ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்

உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.

ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.

நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறை யருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !

இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

· உலகம் முடியும் காலம் வரை,

· மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,

பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُون

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, July 25, 2011

''புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்''



“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)
ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
- இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
- ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
- ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
- நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
மணமுடையது,
- இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்
ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:
1. தூய்மையான நோன்பு
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:
“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)
“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)
2. இரவு நேரத் தொழுகை
நபி (ஸல்) கூறினார்கள்:
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)
3. தருமம்
“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
“நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)
4. குர்ஆன் ஓதுதல்
ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
5.இஃதிகாஃப்
நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
6. உம்ரா
“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது
லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.
8. பாவமன்னிப்புக் கோருதல்
“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன் 51:18)
எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.
9.அனுமதிக்கப்பட்டவை
நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
-குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
- பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.
- உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (ஆதாரம்:அபூதாவூத்)
- எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். ( ஆதாரம்: அஹ்மத்)
- இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.
10.அனுமதிக்கப்படாதவை
- உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (அல்குர்ஆன் 2:187)
எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)
- இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
- வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
11.சலுகையளிக்கப்பட்டவர்கள்
நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
( அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)
12.தடைசெய்யப்பட்டவர்கள்
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்.




இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்

Wednesday, July 20, 2011

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ~நூல்:புகாரி, முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி” என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. ~அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி)

~நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன்.

~அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி)
~நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன்.

~அறிவிப்பவர்:மாலிக் (ரழி)
~நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்)

~அறிவிப்பவர்: அபூஹுரைரா
~நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.

~அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி)
~நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள்.

~அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
~நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ~அறிவிப்பவர்: அனஸ் (ரழி)

~நூல்:திர்மிதீ, அபூதாவூது.



Tuesday, March 1, 2011

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த
வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது
எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே
உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.
(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில்
தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம்
நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது
குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன்
பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின்
குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ
தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)
கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல்
ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ
இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக
நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும்
உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.
அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து
செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக்
கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ்
இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்...
5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள்
மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள்
மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட
(அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள்
மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள்
விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால்
படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு
அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு
வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து
கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப்
புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள்
நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர்
எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன்
விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை
வி;டுச்செல்கிறேன்... அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!
7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை.
உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து
கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள்.
உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி
வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள்
செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப்
படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று
ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக்
கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச்
சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன்
உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு
நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக
மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த
பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும்
நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும்
செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு)
தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும்
சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும்
ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட
உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை
நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை
விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால்
படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும்
இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல்
பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக்
கேட்டனர்.
10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா?
இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம்
விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்!
இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக
நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து
அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப்
பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது
திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!!
அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச்
செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்... ஏனெனில் நேரில் கேட்போரைவிட
கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது,
இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்.