125x125 Ads1

125x125 Ads1

Tuesday, February 18, 2014

இஜ்திஹாத் ஒரு நோக்கு!

(இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டுள்ளது எனும் மகா தவறுக்கும் , அது யாரும் எப்படியும் நுழைய முடியும் எனும் நிலையில் திறந்துள்ளது எனும் நவீன  வேடிக்கையான  பார்வைக்கும் இடையில் இஸ்லாமிய வாழ்வு நோக்கிய பாதை இன்று அல்லாடி நிற்கின்றது . இத்தகு தவறை புரிய வைக்க ஒரு சிறு பதிவு .                  - அபூ ருக்சான்-)                                                                                                                                      

     இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்குர்ஆன், ஸுன்னா ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களது மரணத்துடன் பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்ப்பதற்கோ அல்லது இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்பது மிக முக்கியமான அடிப்படையாகும்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் கூறும் நடைமுறைப் பிரச்சினைகளை விளங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி ‘இஜ்திஹாத்’ என்றழைக்கப்படுகிறது.


‘இஜ்திஹாத்’ சொல் விளக்கம்:

  ‘இஜ்திஹாத்‘ என்ற சொல் ‘ஜுஹ்த்’ (முயற்சி) அல்லது ‘ஜஹ்த்’ (கஷ்டம்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மொழி ரீதியாக இப்பதம் ஒரு விஷயத்தை நிறைவேற்றுவதற்காக அல்லது ஒரு விஷயத்தை அடைந்து கொள்வதற்காக முயற்சித்தல் அல்லது பாடுபடுதல் என்ற கருத்தைத் தருகின்றது.

     இஸ்லாத்தின் பார்வையில் ‘இஜ்திஹாத்’ என்றால் என்ன என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் பின்வரும் வரைவிலக்கணம் மிகப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.‘இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களின் ஆளமான கருத்துக்களில் இருந்து ஷரீஆ உள்ளடக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்ப்புகளைப் பெறுவதற்கு ஒரு சட்டத்துறை அறிஞர் தனது ஆற்றல்களைப் பிரயோகிப்பதே ‘இஜ்திஹாத்’ ஆகும்.

    இவ்விளக்கத்திலிருந்து ‘இஜ்திஹாத்’ பிரயோகிக்கப்பட வேண்டிய பகுதி இஸ்லாமிய சட்டத்துறை (பிக்ஹு) தான் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் . நம்பிக்கையோடு தொடர்பான (அகீதா) விஷயங்கள் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவற்றில் இஜ்திஹாதைப் பிரயோகிக்க முடியாது என்பது மிகப் பெரும்பாலான் அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

   அவ்வாறே அல்குர்ஆன் ஸுன்னாவில் ஆதாரம் இல்லாத விஷயங்களை மார்க்கத்தில் உருவாக்கி விட்டு அவற்றை உருவாக்குவதற்கு இஜ்திஹாத் காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில் அவ்வாறு உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும்.

இஜ்திஹாதின் தேவை!

    இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டக் கலையின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகும். சட்டத்துறையின் வளர்ச்சியும், விருத்தியும் இஜ்திஹாதிலேயே தங்கியுள்ளது எனலாம். அவ்வப்போது எழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை விளக்கி வைப்பது இஜ்திஹாதாகும். இஜ்திஹாதின் வாசல் திறக்கப்படாவிட்டால் நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.

இஜ்திஹாதிற்கான நபி (ஸல்) அவர்களின் அனுமதி!

     ‘தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

  இந்த ஹதீஸின் மூலம் இஜ்திஹாத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதை அவதானிக்கலாம்.உண்மையில் முஸ்லிம் சமூகம் அறிவியல் துறைகளில் முன்னேற்றமடைவதற்கு வழிவகுத்த காரணிகளில் முக்கியமானதாக இருப்பது இஸ்லாம் இஜ்திஹாதிற்கு அளித்த அங்கீகாரமும் உந்துதலுமே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

    இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இஜ்திஹாதிற்கான அனுமதியை வழங்கியதனால் தான் நபித்தோழர்கள் நபியவர்கள் உயிருடன இருக்கும்போதே இஜ்திஹாதில் ஈடுபட்டார்கள்.
1) அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர்கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர்த் தொழுகைக்கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். எனவே, அங்கு சென்றுதான் அதனைத் தொழுவோம் என்று கூற, மற்றும் சிலர் அவ்வாறல்ல. நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப்பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

    ‘பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்’ என்ற ஹதீஸைப் புரிந்து கொள்வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத்தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸருத் தொழுகைக்கு அங்கு சென்றடையக் கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.

2) ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூறவில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : அஹ்மத், நஸாஈ)

3)  நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழுகையின் நேரம் முடிவடைய முன்னரே நீரைப் பெற்றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகையைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபியவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து ‘சரியாக ஸுன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்’ என்றார்கள். திருப்பித் தொழுதவரைப் பார்த்து ‘உனக்கு இரண்டு தடவைகள் கூலி கிடைக்கும்’ என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்  : அபூதாவுத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ)

        மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்திஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்திஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்ததனாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.

இஜ்திஹாதின் ஒழுக்கங்கள்!

  இவ்வாறான செய்திகளிலிருந்து இஜ்திஹாதுடைய விஷயத்தில் நபித்தோழர்கள் கடைப்பிடித்த சில ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
1. குறிப்பிட்ட ஒரு ஸுன்னாவைப் புரிந்து கொள்வதற்காக நபித்தோழர்கள் முயற்சி செய்து ஒரு முடிவுக்கு வரும்போது அதே ஸுன்னாவைப் புரிந்து கொள்வதில் மாற்றுக் கருத்தைக் கொண்டோரை அவர்கள் பாவிகள் பட்டியலில் சேர்க்கவோ அல்லது அவர்கள் வழிகேடர்கள் என்று கூறவோ முயற்சிக்கவில்லை.

2. தமது கருத்தை மாற்றுக் கருத்தை உடையோரிடம் திணிக்க முற்படவில்லை.

3. தமது இஜ்திஹாதின் அடிப்படையில் தமக்கு சரி என்று பட்டதைச் செய்வதில் அவர்கள் பின் நிற்கவில்லை.

4. இஜ்திஹாதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவிக்கவில்லை.
இந்த ஒழுங்குகள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவைகளாகும்.

     ஆக, இஜ்திஹாத் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புரிந்து கொள்வதற்காக இஸ்லாம் அஙகீகரித்து ஆர்வமூட்டிய ஒரு வழிமுறையாக இருக்கின்றது. அதனை சரியாகப் புரிந்து கொண்டு சரியாக அதைப் பிரயோகிக்க அதற்குத் தகுதியானவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

Sunday, May 19, 2013

மஸ்ஜித்களில் இரண்டாவது ஜமாஅத் தொழுகைகளும் கூடுமா கூடாதா என்ற விளக்கங்களும்

இமாமும் முஅத்தீன் நியமிக்கப்பட்ட  மஸ்ஜிதில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவது பற்றி தான் என்ன தீர்ப்பு என்று இங்கே ஆராயப் படுகிறதே தவிர இவ்வாறான மஸ்ஜித்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தொழுகையை திரும்ப திரும்ப ஜமாஅத் ஆக நடத்துவது ஆகுமாக்கப்பட்டுள்ளது. 

இமாம் ஷாபி ரஹீமஹுல்லாஹ் இது தொடர்ப்பாக அவருடைய கிதாபுல் உம்மில் பேசும்போது
" ஒரு கூட்டம் மஸ்ஜிதில் நுழைந்து , அந்த மஸ்ஜிதில் இமாம் தொழுகையை ஜமாஅத்தாக முடித்திருந்தால் அவர்கள் தனியே தொழட்டும். இருப்பினும் அவர்கள் ஜமாஅத் ஆக தொழுதார்கள் என்றால், அவர்களது தொழுகை ஆகுமானது ஆகும். என்றாலும், அவர்கள் இவ்வாறு செய்வதை நான் வெறுக்கிறேன்.  

மேலும் , கூறினார் " இமாமும் முஅத்தீனும் நியமிக்கப்படாத பாதை ஓரப் பள்ளிவாசல்களில் எத்தனை ஜமாஅத் தொழுகை நடத்தினாலும் அதில் பாதகமில்லை. 



பின்னர் கூறினார்., " நாங்கள் நினைவு படுத்தியிருந்தோம், ஒரு சஹாபாக்களின் கூட்டம் மஸ்ஜிதுக்கு வந்து , ஜமாஅத் தொழுகையை தவற விட்டதால் அவர்கள் தனியாக தொழுதார்கள். அவர்களுக்கு அது செய்யக்கூடியாதாக இருந்தும் அவ்வாறு செய்யவில்லை ஏனெனில் ஒரே மஸ்ஜிதில் இரண்டு தடவைகள் ஜமாஅத் நடத்துவது அவர்களுக்கு வெறுப்பான செயலாக இருந்தது. 

மேலே கூறியவைகள் இமாம் ஷாபி இன் வார்த்தைகள்.  சுருக்கமாக இந்த இமாம் ஷாபி இன் விடயங்களை இமாம் ஹாபித், அபு பக்கர் இப்னு அபி ஷைபா அவர்கள் தங்களுடைய முஸ்னபில் மாற்றி அறிவித்துள்ளார்கள். அதாவது,  உறுதியான அறிவிப்பாளர் வரிசையுடன் இமாம் ஹசனுள் பஸரி ரஹீமஹுல்லாஹ் ஊடாக , சஹாபாக்கள் ஜமாஅத் தொழுகை தவறிவிடின் தனித் தனியாக தொழுவார்கள் என்பதாக அறிவிக்கிறார்கள்.

இன்னும் இந்த விடயம் கீழ் வரும் ஹதீதின் ஊடாக விளக்கப்படுகிறது.
அபூ பக்ரஹ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
தொழுகையை நாடி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் மதீனாவின் எல்லையிலிருந்து புறப்பட்டு வந்தார்கள். அப்போது மனிதர்கள் தொழுது முடித்திருக்கக் கண்டார்கள். எனவே தங்களது வீட்டிற்குச் சென்று,தங்களது குடும்பத்தினரை ஒன்றுகூட்டி, அவர்களை வைத்துத் தொழுகைநடாத்தினார்கள்.
(தபரானி கபீர்,தபரானி அவ்ஸத்,இமாம் அல்பானி ஹசன் என்று திர்ப்பளித்துள்ளார்கள்) 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தங்களுடைய இரு தோழர்களுடன் ஜமாஅத் ஆக தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அவர்கள் மஸ்ஜிதை நெருங்கிய பொது மக்கள் தொழுகை முடிந்து வெளியேறுவதை கண்டார்கள். அவர்கள் வீட்டுக்கு திரும்பி தொழுகையை முன் நின்று நடத்தினார்கள்.
( முஹ்ஜமுள் கபீர் ) 

நபிக்கு தோழராக இருந்து , மார்க்கத்தின் அறிவும் விளக்கமும் பெற்ற இமாம் இப்னு மஸ்ஹூத் அவர்கள் திரும்பியது எப்படி என்றால், அவருக்கு ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்கள் நடத்துவதை கூடும் என அறிந்திருந்தால் அவர்கள் தங்களின் தோழர்களுடன் தொழுதிருப்பார்கள் . ஏனெனில் , அவர்கள் , " ஜமாஅத் தொழுகையை தவிர ஏனைய தொழுகைகளை வீட்டில் தொழுவது தான் சிறப்பு என்ற நபி மொழியை அறிந்திருந்தார்கள். கடமையான ஜமாஅத் தொழுகையை அவர்கள் மஸ்ஜிதில் தொழாமல் அவர்களை தடுத்தது எது ?? ஏனெனில் அவர் அறிந்திருந்தார், மஸ்ஜிதில் தொழுவதாக  இருந்தால் தனியே தான் தொழவேண்டும்.  மஸ்ஜிதில் தனித் தனியே தொழுவதை விடவும் வீட்டில் ஜமாஅத் ஆக தொழுவது சிறந்தது, என்பதை அறிந்திருந்த படியால் அவர் வீட்டில் ஜமாஅத் நடாத்தினார். 


இன்னும் இந்த விடயம் கீழ் வரும் ஹதீதின் ஊடாக விளக்கப்படுகிறது. அதாவது, 
ஒரு தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, ''மக்களுக்குத் தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவி விட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளைக் கொழுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எலும்புள்ள கொளுத்த இறைச்சி கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்து கொண்டு விடுகிறார்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் )

மீண்டும் ஜமாஅத் தொழுகைகள் மஸ்ஜிதில் நடாத்த முடியும் என்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வீடுகளை எரிக்க் நாடுகிறேன் என்று கடுமையாக கூற தேவையில்லை. ஏனெனில் ஒரு ஜமாஅத் தவறினால் இன்னொன்று கிடைக்கும் என்பது வெளிப்படையானது. 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு ஸதகா  அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார். அறிவிப்பவர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி அபூதாவூத்.

இந்த ஹதீதை ஆதாரமாக சொல்பவர்களுக்கு நாம் பதிலாக கூறுவது என்னவென்றால், நாம் தலைப்பாக எடுத்துள்ள கடமையான இரண்டாவாது ஜமாஅத் பற்றி அல்ல இந்த ஹதீத் பேசுகிறது.  முதல் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் , ஒருவர் மஸ்ஜிதுக்கு வருகிறார், அவர் தனியாக தொழ முற்படுகிறார். இதனை கண்ணுற்ற நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஏற்கனவே, அவர்களுடன் தொழுது முடித்திருந்தவர்கள் நபிலான ஒரு செயலை செய்வற்கு இடமளித்து அங்கிருத்த ஒருவர் நபிலான தொழுகையை வந்தவருடன் சேர்ந்து தொழுகிறார். இது தான் 
அங்கு நடந்தது. எனவே, இந்த ஜமாஅத் தொழுகை இரண்டு பேரை கொண்டது. ஒருவர் இமாம் , மற்றவர் மஹ்மூன். இமாம் ஏற்கனவே தொழாதவர் , மஹ்மூன் ஏற்கனவே தொழுதவர். இமாம் தனது கடமையான தொழுகையை நிறைவேற்றுகிறார். மஹ்மூன் தனது நபிலான தொழுகையை நிறைவேற்றுகிறார். இவ்வாறு தொழுமாறு ஏவியது யார் ? அதாவது இமாமாக, தொழாதவரும் மஹ்மூன், ஆக தொழுதவரும். அங்கே தொழுதவர் ஒருவர் இல்லை என்றால் ஜமாஅத் இல்லை. எனவே இது ஒரு பர்ள் ஆன நபிலான ஜமாஅத் தொழுகை தவிர கடமையான ஜமாஅத் தொழுகை இல்லை. இங்கே பேசுவற்கு எடுக்கப்பட்ட விடயம் இரண்டாவது கடமையான ஜமாஅத்
பற்றியது. எனவே, இந்த விடயத்திற்கு இந்த ஹதீதை ஆதாரமாக எடுப்பது பொருத்தம் இல்லை. ஏனெனில், இந்த ஹதீத் மேலும் ஒரு உண்மையை உறுதிபடுத்துகிறது. அதாவது, இந்த மனிதருடன் தொழுது ஸதகா செய்யக்கூடியவர்  யாரும் உண்டா ? என நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். 
இங்கே, ஒரு ஸதகா கொடுப்பவரும், ஒரு ஸதக்கா பெறுபவரும் இருக்கிறார்கள். அறிவிலும் , விளக்கத்திலும் குறைந்த ஒருவரிடம் இதை பற்றி கேட்டாலும் கூறுவார், அதாவது நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்த ஸதகாவில், யாரு கொடுப்பவர், யாரு பெறுபவர் என்பதை.    
இப்போது , இந்த விடயத்தை எமது தலைப்புக்கு ஒப்பிட்டு பார்ப்போம் . உதாரணமாக :, 
ஆறு அல்லாது எழு பேர் மஸ்ஜிதுக்கு வருகிறார்கள், கவனிக்கிறார்கள் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டதை பின்னர் வந்தவர்களில் ஒருவர் தொழுவிக்கிறார், 
மற்றவர்கள் அவரின் பின்னல் இரண்டாவது ஜமாஅத் ஆக தொழுகிறார்கள். இப்போது கூறுங்கள், இவர்களில்  யாரு ஸதகா கொடுப்பவர் ? யாரு ஸதகா பெறுபவர் ? மேலே உள்ள ஹதீதில் கூறிய பிரகாரம் யாருக்கும் பதில் அளிக்க முடியாது. ஏனெனில், இங்கே, தொழுபவர்கள் அனைவரும் பிந்தி வந்த காரணத்தால் அவர்களது கடைமையானதை செய்கிறார்கள், எனவே, யாரும் யாருக்கும் ஸதகா செய்ய முடியாது என்பது மேலே உள்ள ஹதீதுடன் ஒப்பு நோக்குகையில் வெளிப்படையானது.  மேலே உள்ள ஹதீதில் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதவர் ஸதகா கொடுக்கிறார் , ஏனெனில் அவர் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது 27 மடங்கு நன்மையை பெற்றவர். இதனால் அவருக்கு தொழுகையை நடத்திய இமாமுக்கு ஸதகா கொடுக்கமுடிந்தது. அங்கே 
ஸதகா கொடுப்பவர் இல்லை என்றால் மேலே உள்ள ஹதீதில் வந்தவர் தனியாக தொழுவார். ஏனெனில் வந்தவர் நிச்சயமாக நன்மையை இழந்தவர், ஏழை. , ஸதகா கொடுப்பவர் ஏற்கனவே பெற்றுக்கொண்டதை பின்னர் வந்தவர் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால், அங்கே ஏற்கனவே நன்மையை பெற்றுக்கொண்டவர் அவருக்கு ஸதகா கொடுக்க வேண்டியதாயிற்று. எனவே, இங்கு யார் ஸதகா கொடுப்பவர் , யார் ஸதகா பெறுபவர் தெளிவாகிவிட்டது. மேலே நாம் எடுத்துக் கொண்ட உதாரணத்தில் உள்ள அனைவரும் முதல் ஜமாஅத் ஐ தவறவிட்ட காரணத்தால் ஏழைகள் , எனவே, நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கேட்ட மாதிரி " இந்த மனிதருடன் தொழுது ஸதக்கா செய்யக்கூடியவர்  யாரும் உண்டா ? " என்ற கேள்வியை இங்கு பிரயோகிக்க முடியாது. ஆகவே, இந்த ஹதீதை ஆதாரமாக மஸ்ஜித்களில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் அப்படிக் கொள்வது இந்த விடயத்திற்கு சம்பந்தம் இல்லாதது.   

   
இந்த ஆதாரங்களோடு ஒப்பிடும் இன்னொரு ஹதீதையும் பார்ப்போம் . அதாவது, நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், " ஜமாஅத் ஆக தொழுவது தனியாக தொழுவதை விடவும் 27 மடங்கு சிறப்பானதாகும். " அவர்கள் இந்த ஹதீதை ஒரு பொதுவான ஆதாரமாக கொள்கிறார்கள். ஏனெனில், இந்த ஹதீதில் ஜமாஅத் என்ற வார்த்தைக்கு முன் வரும் "அல் ,அந்த " என்ற வார்த்தையை பொதுவாக எல்லா ஜமாஅத் தொழுகைக்கும் என்று கருதுயீடு செய்துக் கொண்டார்கள். இதன் 
அடிப்படையில் அவர்களிடம் எல்லா ஜமாஅத் தொழுகைகளும் சிறப்பானது தனியே தொழுவதை விட. இதற்கு விளக்கமாக நாம் கூறுவோம், " அந்த, அல் " என்ற வார்த்தையின் அடிப்படையில் இது பொதுவான எல்லா ஜமாஅத் தொழுகைகளையும் குறிக்காது. மாறாக இது ஒரு குறிப்பிட்ட வகையை குறிக்கும் என்பதாகும். 
அதாவது, நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கப்படுத்திய , குறிப்பிட்டு சொன்ன அந்த ஜமாஅத் ஐ, மக்களுக்கு பங்குபற்றும்  படி ஏவிய ஜமாஅத் ஐ
, அதனை கை விட்டர்வகளின் வீட்டை எரிப்பதாக எச்சரிக்கை செய்த ஜமாஅத் ஐ
, இப்படியானவர்கள் முனாபிக்குகள் என்று கூறிய அந்த முதல் ஜமாஅத் தான் தனியே தொழுவதை விடவும் 27 மடங்கு கூலியை பெற்று தரும் சிறப்பான ஜமாஅத் ஆகும்.. 


இதே நடவடிக்கையை தான் இப்னு மஸ்ஹூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் செய்கிறார்கள். இமாம் ஹசனுள் பஸரி ரஹீமஹுல்லாஹ் , சஹாபாக்கள் இவ்வாறு தான் நடந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். இதே கருத்துதான் இமாம் ஷாபி , இமாம் மாலிக், இமாம் அபு ஹனீபா , இமாம் அஹ்மத் ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன்

அனைவரும் கூறுகிறார்கள். எனவே, சுன்னாவுக்கு விளக்கம் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் இருந்தும் சஹாபாக்களிடம் இருந்தும் இமாம்களிடம் இருந்தும் வந்து விட்டது. எனவே, இரண்டாவது ஜமாஅத் நடாத்துவது பித்அத் ஆகும். 



அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


source: DHARUSSALAF

Tuesday, November 6, 2012

ஆண்மைக் அழகு தாடி வளர்த்தல்

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி)
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அஹ்மத்
தாடியை வலியுறுத்தி, நபி ஸல்லல்லரு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக் கொள்ள அறவே இடமில்லை.
மேற்கூறிய நபிமொமிகளை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களில் சிலர் “தாடியை சிறிதளவும் குறைக்கக் கூடாது” என்று கருதுகின்றனர். இன்னும் சில அறிஞர்கள் குறைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இரண்டாவது தரப்பினரின் கருத்தே சரியானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
“இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள் தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்” அறிவிப்பவர் : நாபிவு(ரழி) நூல்கள் : புகாரி, முஅத்தா
“இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்” என்று மர்வான்(ரழி) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)
இப்னு உமர் (ரழி) அவர்களின் இந்தச் செயல், தாடியைக் குறைக்கலாம் என்பதற்குத் தெளிவான ஆதாரமாகும். இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹாபாக்களின் வித்தியாசமானவர்கள். நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் அப்படியே பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்களின் தற்செயலான காரியங்களையும் கூட அவர்கள் பின்பற்றக் கூடியவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்திலாவது தன் ஒட்டகத்தை சிறிது நேரம் நிறுத்தினால் – அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல நேர்ந்தால் – அந்த இடத்தில் தனது ஒட்டகத்தை நிறுத்துவார்கள். (அல் இஸாபா, பாகம் 2, பக்கம் 349) இது போன்ற காரியங்களில் எல்லாம் நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. எனினும், இப்னு உமர்(ரழி) அவர்கள் இது போன்ற செயல்களையும் அப்படியே பின் பற்றியவர்கள்.
அவர்கள் தங்களின் தாடியைக் குறைத்திருந்தால், நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி இன்றி நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ‘தாடியை விட்டு விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும் கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர்(ரழி) அவர்கள் தான். ஹதீஸை அறிவிக்கக் கூடிய இப்னு உமர்(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளார்கள் என்றால், ்குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்’.
“தாடியை விட்டு விடுங்கள்! என்ற இன்னொரு ஹதீஸை அபூ ஹுரைரா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபூஹுரைரா(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளனர் என்று இமாம் நவபீ(ரஹ்) அவர்கள் ‘ஷரஹுல்’ முஹத்தப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

Friday, May 18, 2012

அழைப்புப் பணி

நன்மைகளின் பால் அழைப்பவன் அதைச் செய்பவன் போன்றவனாவான்.’ (நூல்: திர்மிதி-2662) அழைப்புப் பணி என்பது, நபிகளார் நம் ஒவ்வொருவரினதும் கரங்களில் ஒப்படைத்துச் சென்ற ‘அமானத்’ ஆகும். இதனையே நபி(ஸல்) அவர்கள் ஓரிலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது இறுதி ஹஜ்ஜின் அரபாப் பேருரையின் போது ”மக்களே நான் எத்தி வைத்து விட்டேனா? என இரு முறை வினவி, இறைவா நீயே சாட்சியாக இரு என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தின் பல்துறைகளையும் எடுத்துக் கூறி, வந்தவர் வராதவருக்கு எத்தி வைத்துவிடுங்கள் என்றதொரு அமானத்தையும் அந்த இடத்தில் கூறிவைத்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: புஹாரி-7078) அதனை மேலும் வலியுறுத்தும் விதமாக, ”என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு)செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றா னோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: புஹாரி-3461) நபி(ஸல்) அவர்களின் பிரச்சாரப் பணி முழுமை பெற்றதை இறைவன் ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)என்று இதனை மேலும் உறுதி செய்கின்றான். இப்பாரிய பணியை அனந்தரமாகப் பெற்ற ‘தாஈ’களே உலமாக்கள். இவர்கள்தான் நபிமார்களின் வாரிசுகள். இந்த ‘தாஈ’கள் வெறும் சடவாதிகள் அல்ல. உள்ளதை உள்ளபடி எத்திவைப்பதுதான் இவர்களது பணி. இதனையே அல்குர்ஆன் தெளிவாகப் பறைசாற்றுகின்றது ”அவர்களுக்கே அழ்ழாஹ் நேர்வழி காட்டினான். எனவே, அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 06:90) நபிமார்கள்தான் இவர்களது முன்மாதிரிகள். மனைவியாக இருந்தாலும், தந்தையானாலும், அரசியல்வாதிகளாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லி வைப்பார்கள். வெள்ளிமேடைகளில் ஒரு பத்வாவும், தனது குடும்பமென்றால் மற்றொரு தீர்ப்பும், தான் சந்திக்கும் அரசியல்வாதிகள் என்றால் ஒரு நியாயமும் காட்டவே மாட்டார்கள். நபிமார்களின் வாழ்வும் தியாகமும் இவர்களில் பிரதிபலிக்கும். இவர்கள் யாருக்கும் விலை போகமாட்டார்கள். சத்தியத்தை எடுத்துரைப்பதால் இத்தனை நாளும் தான் கட்டிக்காத்த கௌரவமும், கண்ணியமும் சரிந்து போவதை அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள். தோற்றத்தில் இந்த ‘தாஈ’கள் சற்று பலவீனர்களாகக் கூடத் தெரியலாம். புகழ்மிகு குடும்பப் பின்னணியும் இல்லாதிருக்கலாம். தஃவா களத்திற்கு வருகின்ற ‘தாஈ’கள் தனது தந்தையின் பெயரும், பதவியும் நான்கு பேர் மெச்சுகின்ற வண்ணம் அமைந்திருந்தால்தான் சத்தியப் பிரச்சாரம் செய்யமுடியும் என்பதில்லை. ஒரு ‘தாஈ’ சாதாரண கூலித்தொழிலாளியின், அங்காடி வியாபாரியின், ஏன் மார்க்கப் பின்னணியே இல்லாத பிச்சைக்காரனின் மகனாகவும் இருக்கலாம். மாறாக, தான் சொல்லும் செய்தியில் உண்மையும், உறுதியும் இருந்தால் அவனே உயர்ந்தவன். ஏழைக்கொரு சட்டம், பணக்காரர்களுக்கொரு பத்வா என்று யூதப் பாதிரிகள் சத்தியத்தை மறைத்தது போன்று துரோகம் செய்யவுமாட்டார்கள். ”தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக இது அழ்ழாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவோருக்குக் கேடுதான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.’ (அல்குர்ஆன் 02:79). இவ்வாறு அழ்ழாஹ்வின் சாபத்தை விட்டும் சத்தியத்தை சொல்கின்ற இந்த ‘தாஈ’கள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள். முன்வைக்கின்ற செய்தியிலும், நடைமுறைப்படுத்துவதிலும் இறையச்சமே இவர்களது இலக்கு. யாருடைய பாராட்டல், கரகோசங்களும் அல்லது விமர்சனங்கள், தூற்றல்களும் இவ் இறையச்சத்திலிருந்து இவர்களை இம்மியளவும் திசை திருப்பாது. ‘ ‘அழ்ழாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.’ (அல்குர்ஆன் 65:02) எந்த சந்தர்ப்பத்திலும் நீதி, நேர்மை தவறவேமாட்டார்கள். இறைத்தூதரின் ஒரு செய்தியை ஆழமாக நம்புவார்கள். ‘அநியாயக்கார அரசனுக்கு முன்பு சத்தியத்தை முன்மொழிவதே மிகச்சிறந்த அறப்போராகும்.’ (அறிவிப்பவர்: அபூ உமாமா(ரழி), நூற்கள்: அஹ்மத்-18446, இப்னுமாஜா-4009) எது நடந்தாலும் ‘மறுமை’ என்ற ஒன்று உண்டு அப்போது அந்த வல்ல நாயனின் தீர்ப்பே இறுதியானது என்ற உறுதி இந்த ‘தாஈ’களிடம் மிகைத்திருக்கும். மிம்பர்களில் நீதியையும், நியாயத்தையும் வெளிப்படுத்தாது விட்டால் இவர்கள் எப்படி ‘தாஈ’களாக இருக்க முடியும். பொய், புரட்டு, குரோதம் இவர்களிடம் இருக்கவே கூடாது. ஆனாலும், ‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை’ போன்று மிம்பர்களை அசிங்கப்படுத்தும் தாஈகளும் இல்லாமல் இல்லை. ‘நம்பிக்கை கொண்டோரே! அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அழ்ழாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அழ்ழாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 05:08) நீதி, நேர்மை இல்லாதவர்களிடம் இறையச்சம் இராது. இறையச்சம் இல்லாதவர்கள் நபிமார்களை முன்மாதிரியாகக் கொண்டு தஃவாவை எங்கே முன்னெடுக்கப் போகின்றார்கள். பொதுவாக ஒரு தாஈயானவர் தனது தஃவாப் பணியின் பிரதிபலன் மறுமையில்தான் என்பதை நம்ப வேண்டும். பதவி உயர்வுகளும், பதவி நீக்கங்களும் இந்த தாஈகளின் தஃவாவில் எப்பாதிப்பையும் ஏற்படுத்தாது. இறுதியாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய முனாபிக்கின் தன்மைகள் ‘தாஈ’களிடம் மருந்திற்குக் கூட இருக்கக் கூடாது. ‘ ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான். ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை மீறுவான். விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), நூல்: முஸ்லிம்-106) ஆகையால் மரணத்தையும், மறுமையையும் பயந்து வார்த்தையில் உறுதியும், வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தலும், இறையச்சமும் கொண்டு அழைப்புப் பணியை செவ்வனே செய்ய ‘தாஈ’கள் முன்வரவேண்டும். எல்லாம் வல்ல அழ்ழாஹ் நம் அனைவரையும் இறையச்சமுள்ள தாஈகளாக ஆகுவதற்கு துணை புரிவானாக!

Saturday, March 24, 2012

பெற்றோரைப் பேணுதல்

திருக்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இறைவழிபாட்டுக்கு அடுத்தபடியாகச் செய்யப்படும் கட்டளை பெற்றோருக்குரிய உரிமைகளைப் பற்றியேயாகும். எனவே, மனிதனின் உரிமைகளில் முதன்மையானது பெற்றோரின் உரிமைகளாகும்.
பெற்றோரைப் பேணுவதன் அவசியம்
பெற்றோரைப் பேணுவதன் அவசியம், அதன் முக்கியத்துவம், மகத்துவம் போன்றன பற்றி திருமறை குர்ஆன் பல இடங்களில் மிக அழுத்தமாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமன்றி அதற்கு முந்திய மார்க்கங்களிலும் பெற்றோரைப் பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவன் பனூ இஸ்ராஈல்களிடம், பெற்றோரைப் பேணி நடக்கும்படி வாக்குறுதி எடுத்துக் கொண்டான். அல்லாஹ் கூறுகின்றான்,
“அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான்” (இஸ்ரா: 23).
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு எந்தச் செயல் இறைவனுக்கு விருப்பமானது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு (எது?) என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ‘இறை பாதையில் (உழைப்பது) போர் புரிவது’ என்று கூறினார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)
பெற்றோரைப் பேணி நடத்தல் என்பது, தாய் - தந்தை இருவரையும் பேணிக் கொள்வதைக் குறிக்கும். எனவே, ஷரீஆவில் பெற்றோர் நலம் பேணுவது பற்றி பொதுவாகக் குறிப்பிடப்படும் அதேவேளை ஆங்காங்கே தாயைப் பேணுவது பற்றியும், தந்தையைப் பேணுவது பற்றியும் தனித்தனியேயும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாயைப் பேணி நடப்போம்
ஒரு பெண் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.
பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். எனவேதான் இறைவன் கீழ்வரும் வசனங்களில் தாயைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளதைக் காண முடிகின்றது.
“இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).
இவ்வசனத்திலே தாய் - தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுக்கு அடுத்தபடியாக, இறைவணக்கத்துடன் இணைத்துக் கூறியுள்ளான். இதிலிருந்து பெற்றோரைப் பேண வேண்டியதன் அவசியம் தெளிவாகிவிட்டது.
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لاَ تَعْبُدُونَ إِلاَّ اللّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً

அல்லாஹ் கூறுகின்றான்:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ

“நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14 ).
அல்லாஹ் கூறுகின்றான்:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا

“மனிதன் தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யும்படி நாம் உபதேசம் செய்தோம்” (அல்-அஹ்காப்: 15).
தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்ற ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன. அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
இந்நபி மொழியில் மூன்று முறை தாய் என்று பதிலளித்துவிட்டு, நான்காம் முறையாக தந்தை என்று பதிலளித்துள்ளதைக் காண முடிகின்றது. இதிலிருந்து தந்தை நலம் பேணுவதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை. என்றோ, அதிக கவனம் செலுத்தவில்லை என்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது. எனினும், நபியவர்கள் முதல் மூன்று முறையிலுமே, தாய், தாய், என்று கூறியதிலிருந்து, தாய்க்குச் சேவை செய்வதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், தாயைப் பேணுவதை முதன்மையாகக் கருத வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ‘எஜமானனிடம் நல்ல அடிமையாக இருப்பவனுக்கு இரு விதமான நன்மைகள் கிடைக்கும்’ எனக் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரழி) அவர்கள், ‘இஸ்லாத்தில் அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் ஜிஹாதும் ஹஜ்ஜீம், தாய்க்கான சேவையும் இல்லையென்றால், காலம் முழுதும் அடிமையாக வாழ்ந்து மடிவதையே விரும்புவேன்’ என்றார். (நூல்: முஸ்லிம்)
குழந்தை வளர்ப்பு முதல், அனைத்துக் கருமங்களிலும் பெற்றோர் இருவருக்கும் பங்கிருக்கிறது. என்றாலும் தாய்க்குத்தான் குழந்தையின் மூலம் ஏற்படும். இன்னல்கள் அதிகம். எனவேதான் இஸ்லாம் தந்தையை விடவும் தாய்க்கு சேவை செய்வதை முற்படுத்திக் கூறியுள்ளது.

தந்தையைப் பேணி நடப்போம்
ஒரு தந்தை பிள்ளைகளின் மாபெரும் உபகாரியாவார். தனது பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் இரவு பகலாக, வெயிலென்றும் மழையென்றும் பாராது உழைக்கின்றார். பொருளாதார ரீதியாக தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார். வியர்வை சிந்தி உழைத்ததைப் பிள்ளைகளின் நலனுக்காகச் செலவு செய்கின்றார். எனவேதான் தந்தையைப் பேணி நடப்பது பற்றியும் குறிப்பாக சில நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.
நூல்: திர்மிதீ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி)
நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.
அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி)
நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்
ஒரு தந்தை செய்யும் உபகாரங்களுக்குக் கைமாறு செய்ய ஒருபோதும் முடியாது. எவ்வளவுதான் அவருக்கு நாம் உபகாரம் செய்த போதிலும், அவர் எமக்காகச் செய்த நலன்களுக்கும், தியாகங்களுக்கும் ஈடாகாது. எவர் தன் வாழ்வில் தந்தையை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் மகிழ்ச்சி கிடைக்கும். எனவே, தந்தையின் உரிமைகளையும், மரியாதையையும் பேணும் மனிதன் சுவனத்துக்குத் தகுதியானவன் ஆகிறான்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.