125x125 Ads1

125x125 Ads1

Saturday, March 24, 2012

பெற்றோரைப் பேணுதல்

திருக்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இறைவழிபாட்டுக்கு அடுத்தபடியாகச் செய்யப்படும் கட்டளை பெற்றோருக்குரிய உரிமைகளைப் பற்றியேயாகும். எனவே, மனிதனின் உரிமைகளில் முதன்மையானது பெற்றோரின் உரிமைகளாகும்.
பெற்றோரைப் பேணுவதன் அவசியம்
பெற்றோரைப் பேணுவதன் அவசியம், அதன் முக்கியத்துவம், மகத்துவம் போன்றன பற்றி திருமறை குர்ஆன் பல இடங்களில் மிக அழுத்தமாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமன்றி அதற்கு முந்திய மார்க்கங்களிலும் பெற்றோரைப் பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவன் பனூ இஸ்ராஈல்களிடம், பெற்றோரைப் பேணி நடக்கும்படி வாக்குறுதி எடுத்துக் கொண்டான். அல்லாஹ் கூறுகின்றான்,
“அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான்” (இஸ்ரா: 23).
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு எந்தச் செயல் இறைவனுக்கு விருப்பமானது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு (எது?) என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ‘இறை பாதையில் (உழைப்பது) போர் புரிவது’ என்று கூறினார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)
பெற்றோரைப் பேணி நடத்தல் என்பது, தாய் - தந்தை இருவரையும் பேணிக் கொள்வதைக் குறிக்கும். எனவே, ஷரீஆவில் பெற்றோர் நலம் பேணுவது பற்றி பொதுவாகக் குறிப்பிடப்படும் அதேவேளை ஆங்காங்கே தாயைப் பேணுவது பற்றியும், தந்தையைப் பேணுவது பற்றியும் தனித்தனியேயும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாயைப் பேணி நடப்போம்
ஒரு பெண் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.
பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். எனவேதான் இறைவன் கீழ்வரும் வசனங்களில் தாயைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளதைக் காண முடிகின்றது.
“இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).
இவ்வசனத்திலே தாய் - தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுக்கு அடுத்தபடியாக, இறைவணக்கத்துடன் இணைத்துக் கூறியுள்ளான். இதிலிருந்து பெற்றோரைப் பேண வேண்டியதன் அவசியம் தெளிவாகிவிட்டது.
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لاَ تَعْبُدُونَ إِلاَّ اللّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً

அல்லாஹ் கூறுகின்றான்:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ

“நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14 ).
அல்லாஹ் கூறுகின்றான்:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا

“மனிதன் தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யும்படி நாம் உபதேசம் செய்தோம்” (அல்-அஹ்காப்: 15).
தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்ற ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன. அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
இந்நபி மொழியில் மூன்று முறை தாய் என்று பதிலளித்துவிட்டு, நான்காம் முறையாக தந்தை என்று பதிலளித்துள்ளதைக் காண முடிகின்றது. இதிலிருந்து தந்தை நலம் பேணுவதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை. என்றோ, அதிக கவனம் செலுத்தவில்லை என்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது. எனினும், நபியவர்கள் முதல் மூன்று முறையிலுமே, தாய், தாய், என்று கூறியதிலிருந்து, தாய்க்குச் சேவை செய்வதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், தாயைப் பேணுவதை முதன்மையாகக் கருத வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ‘எஜமானனிடம் நல்ல அடிமையாக இருப்பவனுக்கு இரு விதமான நன்மைகள் கிடைக்கும்’ எனக் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரழி) அவர்கள், ‘இஸ்லாத்தில் அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் ஜிஹாதும் ஹஜ்ஜீம், தாய்க்கான சேவையும் இல்லையென்றால், காலம் முழுதும் அடிமையாக வாழ்ந்து மடிவதையே விரும்புவேன்’ என்றார். (நூல்: முஸ்லிம்)
குழந்தை வளர்ப்பு முதல், அனைத்துக் கருமங்களிலும் பெற்றோர் இருவருக்கும் பங்கிருக்கிறது. என்றாலும் தாய்க்குத்தான் குழந்தையின் மூலம் ஏற்படும். இன்னல்கள் அதிகம். எனவேதான் இஸ்லாம் தந்தையை விடவும் தாய்க்கு சேவை செய்வதை முற்படுத்திக் கூறியுள்ளது.

தந்தையைப் பேணி நடப்போம்
ஒரு தந்தை பிள்ளைகளின் மாபெரும் உபகாரியாவார். தனது பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் இரவு பகலாக, வெயிலென்றும் மழையென்றும் பாராது உழைக்கின்றார். பொருளாதார ரீதியாக தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார். வியர்வை சிந்தி உழைத்ததைப் பிள்ளைகளின் நலனுக்காகச் செலவு செய்கின்றார். எனவேதான் தந்தையைப் பேணி நடப்பது பற்றியும் குறிப்பாக சில நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.
நூல்: திர்மிதீ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி)
நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.
அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி)
நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்
ஒரு தந்தை செய்யும் உபகாரங்களுக்குக் கைமாறு செய்ய ஒருபோதும் முடியாது. எவ்வளவுதான் அவருக்கு நாம் உபகாரம் செய்த போதிலும், அவர் எமக்காகச் செய்த நலன்களுக்கும், தியாகங்களுக்கும் ஈடாகாது. எவர் தன் வாழ்வில் தந்தையை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் மகிழ்ச்சி கிடைக்கும். எனவே, தந்தையின் உரிமைகளையும், மரியாதையையும் பேணும் மனிதன் சுவனத்துக்குத் தகுதியானவன் ஆகிறான்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment