125x125 Ads1

125x125 Ads1

Monday, December 12, 2011

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—

1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் ‘சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் ‘சதக்கா’ செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

Saturday, December 10, 2011

யார் கடவுள்…?

ஓரிறையின் நற்பெயரால்

இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. “கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.

இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.

இயற்கையா? இறைவனா?

இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் “அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?” என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.

அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை.

சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?

இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் “இயற்கை” அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது “தற்செயலாக” -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.

இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.

ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.

இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.

ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது “தற்செயல்” மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.

எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.

ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே “கடவுள்” என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?

யார் கடவுள்?

சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் “கடவுள்’ நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான்.

ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.

*கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.

*அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.

*எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.

*மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.

*மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது

*அவரை பற்றி முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

*மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் “அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து” அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

*எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்

*நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

*மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.

இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்

இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ “அவர் தான் கடவுள்”

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

Saturday, November 5, 2011

தியாகத் திருநாள்

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது. அதே போல், நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து( அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு “முஸ்லிம்” என்று பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக. நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது ‘ரப்’பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. “இப்ராஹிமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்.” (அல்குர்ஆன் 3:95) இப்றாஹிம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹிம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள். “என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச்செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?” என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். “மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா! குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே!” என்று அதட்டுகிறார். நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போஷித்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றுற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர்களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்”, என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார். “இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப்போய்விடு” (அல்குர்ஆன் ் 19:46) என்றார். ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார்கள் இப்ராஹீம்(அலை)அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவ பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்ாரத்தை இப்ராஹிம்(அலை)அவர்கள் கை விடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு. ஒரு பெரிய சிலையின் தோளிலேயே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னா பின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதை பதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்ராஹிம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன் தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து – இல்லை இழுத்து வந்து இப்ராஹிம் (அலை) அவர்களை விசாரிக்கின்றனர். “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். “தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்” என்று குத்திக் காட்டுகிறார்கள்:- (அல்குர்ஆன் ் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹிம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை. தைரியமாக நெஞ்சுயர்த்தி தான் கொண்டுள்ள அல்லாஹ் ஓருவன் மட்டுமே என்ற கொள்கையை மன்னனிடம் எடுத்து சொல்கிறார்கள், முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ் (ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (அல்குர்ஆன் 21:68,69) நபி இப்றாஹிம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்து விட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது -தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹிம் (அலை). பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள். ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும்பாலை வனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹிம்(அலை). “எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?” என்ற பாச மனைவியின் கேள்விக்கு, “ஆம்!” என்ற பதிலே இப்றாஹிம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள். நாட்கள் செல்கின்றன. கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் – அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருத்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம் ஜம்” நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும், ‘ஜம்ஜம்” தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது. பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹிம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வர முடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அது தான் போலும். அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. “அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்” (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள். முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அைனத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்து பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதை பதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகிறார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். “தந்தையோ வயது முதிர்ந்தவர்; நீயோ வாழ வேண்டிய வயது. உலக வாழ்க்கையை இனிமேல் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை. அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?” தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான். அல்லாஹ் (ஜல்) இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள். ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல் அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்க வைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், “ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் – இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (அல்குர்ஆன் 37 :103-110) இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈதையே(பெருநாளைேய) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல்லாவை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹிம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125) தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள். அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும். “(நீர்) கூறும்! எனது தொழுகை, எனது ஹஜ்ஜின் கிரியைகள், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே.” (அல்குர்ஆன் 6: 162) எந்த ஒரு காரியத்திலும் நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லா பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிாபார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன். அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத் தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்; இன்று மக்களுக்கு மத்தியில் பெரிது படுத்திக் காட்டப்படும் மாயாஜல வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக ஒரு பெரியார் இன்னொருவரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார். கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்ைடயிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்து விட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் காப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி வலியாக இருக்க முடியும்? ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி ‘கராமத்’ காட்ட முடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருத்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள். நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பினும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. “எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் செய்ய முடியாது. “எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டு வர முடியாது”. (அல்குர்ஆன் ் 40:78) மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத் தான். (அல்குர்ஆன் ் 10:63, 49:13) இந்த மாயாஜலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக் கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. அல்குர்ஆன் ், ஹதீதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும். நபி இப்றாஹிம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள்; கழுத்து அறுபடவில்லை; அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகி விடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். பாறாங்கல் இரண்டாகப் பிளந்து விட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள். கீழ்க் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் ் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள். “ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹிம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை யா இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.” (அல்குர்ஆன் ் 37 : 103 – 107) சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹிம்(அலை) மகனை குப்புறக்கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்து விட்டான்; அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை; அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக் கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும். உண்மைக்குப் புறம்பான, மாயாஜல மந்திரக் கட்டுக் கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்க தோசத்தில் அல்குர்ஆன் ் தெளிவாக பறை சாற்றிக் சென்றிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்குர்ஆன் ைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜல மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப் பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பாாகள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான், செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும். இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பாாக்கும் போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டி விட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு “இமேஜை” உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறைஷிக்காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெயய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும்; பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாய வலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக! “மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6) அல்குர்ஆன் ் ஹதீதுகளுக்கு மாற்றமான, இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அல்குர்ஆன் ் ஹதீதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த “ஈத்” இலட்சியமாக் கொள்வோமாக!

Thursday, September 29, 2011

அழைப்புப் பணியின் முதற்படி التوحيد أولا يادعاة الإسلام!! (1)

அழைப்புப் பணி என்பது மிகவும் உன்னதமான புனிதமான பணியாகும். இப்பணி மிகவும் பரந்து, விரிந்த ஒரு களமாகும் என்று கூறினால் மிகையாகாது! இதன் வெற்றியே மார்க்கத்தின் வெற்றியாகும். எனவே, இப்பாரிய களத்தின் முதற்படி என்ன? இப்பணியை எங்கிருந்து, எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? போன்ற வினாக்களுக்குரிய விடைகளை அறிந்திருப்பது அழைப்பாளர்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான விடயமாகும்.
அப்போது தான் மிக, மிக முக்கியமான விடயத்துக்கு முதலில் அழுத்தம் கொடுத்து விட்டுப், பின்னர் அதற்கடுத்த படியான முக்கிய விடயத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும். பின்பு அதற்கடுத்த படியான நிலையில் உள்ள விடயத்திற்கு என படிப்படியாக அதற்கடுத்த படித்தரத்தில் உள்ள ஏனைய விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இவ்வாறு படிப்படியான முக்கியத்துவம் மிக்கவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அணுகுமுறையே தஃவாப் பணியின் சிறந்த முறையாகும் என்பதை அல்குர்ஆன், சுன்னாவிலும் நேர்வழி நடந்த நல்லோரது வழிமுறைகள் போன்றவற்றிலும் காணமுடிகின்றது.
நபிமார்கள் பலரின் சரிதைகளை அல்குர்ஆன் அழகான முறையில் எமக்குக் கற்றுத்தந்துள்ளது. அவர்கள் தமது சமுதாயத்தினருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களது அழைப்புப் பணியின் பாங்கு எப்படி அமைந்திருந்தது? முதலில் எதன்பால் மக்களை அழைத்தார்கள் போன்ற அனைத்தையுமே நபிமார்கள் பற்றி அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள கதைகளில் காணமுடிகின்றது. ஆம்! அவர்கள் அனைவருமே முதன்முதலில் தம் சமுதாயத்தினரை ஏகத்துவத்தின்பால் அழைத்துள்ளார்கள். அதன் பின்னரே தம் சமுதாயத்தில் காணப்பட்ட குறித்த தவறுகளை விட்டும் நீங்கி விடும்படி போதனை செய்துள்ளனர். கீழ்வரும் திருமறை வசனங்கள் அனைத்தும், நபிமார்களது தஃவாவின் முதற்படியாக ஏகத்துவக் கொள்கையின்பால் மக்களை அழைப்பதாகவே அமைந்திருந்தது என்பதைத் தெளிவு படுத்துகின்றன.
இவ்வகையில் இப்பணியின் முதற்படியாகத் திகழ்வது ஏகத்துவமாகும். அதாவது, ஓரிறைக் கொள்கையின்பால் மக்களை அழைப்பதாகும். அதாவது வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்பதே இக்கொள்கையின் அடிப்படையாகும். எனவே, சகல வணக்க, வழிபாடுகளையும் இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே செய்து, அவை அனைத்தினூடாகவும் அவன் ஒருவனையே ஓர்மைப் படுத்துவதாகும். எனவே, இம்மகத்தான கொள்கையின்பால் அழைப்பதே அனைத்தையும் விட முதன்மையானதாகும்.
لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
“நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (தம் கூட்டத்தாரிடம்) “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனை பற்றி அஞ்சுகிறேன்” என்று கூறினார். (அல்-அஃராஃப்: 59)
وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ إِنْ أَنتُمْ إِلاَّ مُفْتَرُونَ
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. (ஹூது: 50)
‘இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்.); அவர் தம் சமூகத்தாரிடம்: அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்.’ என்று கூறிய வேளையை (நபியே!) நினைவூட்டுவீராக! (அல்-அன்கபூத்: 16)
¨ நபி நூஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
¨ நபி ஹூத் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
¨ நபி ஸாலிஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ
“ஸமூது கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்.); அவர் (அவர்களை நோக்கி) ‘என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயன் இல்லை. (அல்-அஃராஃப்: 73)
¨ நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
¨ நபி யஃகூப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُواْ نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்: ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை – ஒரே நாயனையே – வணங்குவோம்; அவனுக்கே (முற்றிலும்) வழிபட்ட முஸ்லிம்களாக இருப்போம்.’ எனக் கூறினர். (அல்-பகரா: 133)
¨ நபி யூஸூப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَن نُّشْرِكَ بِاللّهِ مِن شَيْءٍ ذَلِكَ مِن فَضْلِ اللّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَشْكُرُونَ . يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللّهُ الْوَاحِدُ الْقَهَّارُ . مَا تَعْبُدُونَ مِن دُونِهِ إِلاَّ أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللّهُ بِهَا مِن سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ أَمَرَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ
‘நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா? ‘அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (வேறெவர்க்கும்) அதிகாரமில்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்கு) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால். மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை. (யூஸூஃப்: 38 – 40)
¨ நபி ஷுஐப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ
மத்யனி (நகரத்தி) லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களிடம் என்) சமூகத்தவர்களே, அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. (ஹூது : 84)
¨ நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
قَالَ أَغَيْرَ اللّهِ أَبْغِيكُمْ إِلَهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعَالَمِينَ
அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாகத் தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும் விட மேன்மையாக்கி வைத்துள்ளான்.’ என்றும் அவர் கூறினார். (அல்-அஃராஃப்: 140)
¨ நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தக்கீம் என்னும்) நேரான வழியாகும்.’ (ஆல இம்ரான்: 51)

Saturday, September 24, 2011

அழைப்புப் பணியின் அவசியம்


இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கின்றது. கடந்த இருபது நூற்றாண்டுகளில் மனித சமுதாயம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றது. மனிதன் பல சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் இதுவரை சந்தித்து வந்த சோதனைகளையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் இத்தகைய ஓர் ஆய்வை நிகழ்த்தியாக வேண்டும். அப்பொழுதுதான் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் பயின்று நேர்வழியில் நடக்க இயலும்.
கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகம் சந்தித்து வந்துள்ள பிரச்சினைகள் ஏராளம், ஏராளம். குறிப்பாக போர்களும், அதன் பாதிப்புகளும், சர்ச்சைகளும், அதன் தொடராக சவால்களும் என பல தலைப்புகள் ஆய்வுக்குரியனவாக இருந்தாலும், நாம் அவசியம் ஆய்வு செய்ய வேண்டிய வேறொன்று அதி முக்கியமானதாகும். அதுதான் அழைப்புப் பணி. இம்முக்கிய பணிகளத்தின் நிலை, மாறி வரும் காலச் சூழலில் எப்படியுள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அழைப்புப் பணியில் நாம் காட்டிய, காட்டிவரும் அலட்சியமே இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமுதாயம் சந்தித்து வரும் சொல்லொணாத் துன்பத்திற்கும், துயரத்திற்கும் அடிப்படையெனில் அது மிகையாகாது. இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைத்திட்ட மகத்தான அருட்கொடையே இஸ்லாம். இதனை இலகுவாகப் பெற்ற காரணத்தால் இஸ்லாத்தின் மகத்துவங்களை நம்மில் அநேகர் அறிந்துகொள்ளவில்லை.
இப்பெரும்பேறு பிறவியிலேயே கிடைக்கப் பெற்றதனாலோ என்னவோ, இந்த இறைத்தூதைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க பிரச்சாரம் செய்ய அதிகமானோர் முன்வரவில்லை.
ஆரம்பத்தில் கலாச்சார ரீதியாகவும், பின்னர் கல்வி ரீதியாகவும், ஊடுருவ ஆரம்பித்த ஆங்கிலேயர்கள், மேற்கத்தியவாதிகள் நாளடைவில் நமது சொல், செயல், சிந்தனை ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டனர். இவ்வாறு சிந்தனை அடிமைத்தனம் வேரூன்றியதன் விளைவாக இஸ்லாத்தை உலக விஷயங்களை விட்டும் அப்பாற்பட்ட ஒன்றாக முஸ்லிம்கள் கருதத் தலைப்பட்டனர்.
தவிர 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே முஸ்லிம்கள் தமது சொல், செயல், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்து விட்டனர் என்றே சொல்லலாம். அதுவரை நிலை பெற்றிருந்த உஸ்மானியப் பேரரசும் 1924 இல் வீழ்ச்சியடைந்ததுடன் எரிந்துகொண்டிருந்த ஒரேயொரு தீபமும் அணைந்து போனது. இஸ்லாமிய எதிரிகள் இவ்வாய்ப்பை வசமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை (அல்குர்ஆன் 2:253). கருத்துத் திணிப்பை இஸ்லாம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. கொள்கைகளைத் தெரிந்து, புரிந்து உணர்ந்து ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றுதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தின் இத்தகைய அழகான கருத்துக்களை சிதைத்து, வரலாறுகளை மாற்றியமைத்து இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்தது. அவர்கள் வளர்த்த தவறான கருத்துக்களும், துவேஷ உணர்வுகளும் இன்றும் நீடித்து வருவது கண்கூடு. ஆங்கிலேய ஆதிக்கத்துடன், அவர்களின் துர்ப்பிரச்சாரங்களுடன், முஸ்லிம்களின் அசட்டையும் சேர்ந்ததால்தான் இன்று வரை உலக முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ளனர்.
ஆதிக்க சக்திகளின் பிடிகளில் சிக்கித் தவிப்பதனாலேயே இன்றைய இழிநிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகி உள்ளனர். மேற்கத்திய உலகமோ இஸ்லாமிய சித்தாந்தத்தை சிதைத்து அழிப்பதிலும், இஸ்லாமிய வரலாறுகளை இருட்டடிப்புச் செய்வதிலும், முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி அழித்தொழிப்பதிலும் மன நிறைவு கொள்கிறது.
இன்றைய நவீன உலகில், நவீன சாதனங்களின் துணையோடு இத்தகைய நிலைப்பாடு வலுவடைந்து வரும் வேளையில், சூழ்ச்சிகளும் சதி வலைகளும் இன்டர்நெட் போன்ற வலைத்தளங்கள் வரை வளர்ந்து வரும் வேளையில் இஸ்லாமிய அடிப்படை கட்டமைப்பை வலுவுள்ளதாக ஆக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகின்றது.
எனவே முஸ்லிம்கள் என்ற வகையில் நம்மைப் பற்றி மற்ற சமூகங்களிடையே பரவியுள்ள தீய கருத்துக்களைத் துடைத்தெறிய வேண்டியது அவசியம் மாத்திரமல்லாமல் இஸ்லாத்திற்குள்ளும் பரவி விட்ட இஸ்லாத்திற்கு முரணான பல விஷயங்களிலிருந்து நமது முஸ்லிம் பெருமக்களை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம். எனவே, தூய இஸ்லாம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பி, இஸ்லாமிய சமுதாய மறுமலரச்சிக்கும், உலக சமாதானத்திற்கும் நமது பங்களிப்பைச் செய்வோமாக

Saturday, September 10, 2011

நல்லதை ஏவி தீயதைத் தடுத்தல்.

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்” என்றார்கள். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்துவிழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.
புஹாரி :3267 அபூவாயில் (ரலி).

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6069 அபூஹுரைரா (ரலி).

Friday, September 9, 2011

உண்மையான இறைநம்பிக்கையாளராக


'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?

* முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல்.
* நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல்
* நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல்.
* நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.

* நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும் உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
* நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
* நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல் செயல்படுத்துதல்.
* நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட நேசம் கொள்ளல்.
* நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை விட்டும் தூரமாகுதல்.
* நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் கடைப்பிடித்தல்.
* நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
* நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்
* நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
* நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
* நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும் குடும்பத்தாரையும் மதித்தல்.
* நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கேட்டல்.
* நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
* நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை விட்டு விடுதல்
* நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
* நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு- பேசுவதை கண்டித்தல்.
* நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
* நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
* நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு எத்திவைத்தல்.
* நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
* நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.

Thursday, August 25, 2011

உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு


இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ளMBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்சி பெற வேண்டும். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்டவகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.


மேலாண்மை படிப்புகள் படிக்க (MBA) மத்திய அரசால் உறுவாக்கப்பட கல்விநிறுவனம்தான் IIM (Indian Institute of Management ). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாரம்மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM-ல் படித்தவர்கள். மிக பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்க்கு உலகதரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னனிநிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது. CAT நுழைவு தேர்வில் எடுக்கும்மதிப்பெண் IIM மட்டுமல்லாமல் பிற அரசு மறும் தனியார் மேலாண்மை கல்விநிறுவனங்களிலும் MBA சேர்வதற்க்கு பயன்படுகின்றது.


CAT-2011 நுழைவு தேர்வை பற்றிய விபரம்


விண்ணப்பிகும் முறை : குறிபிட்ட Axis வங்கி கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கி, இந்த www.catiim.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வவுச்சர் கிடைக்கும் Axis வங்கி கிளைகளின் முகவரி இந்த இணையதளத்தில்www.catiim.in/axisbank_branch.html உள்ளது.


விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28


விண்ணப்பத்தின் விலை : ரூ.1,600


தேர்வு நடைபெறும் தேதி : இந்த தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும், விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.


தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :


1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. குறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.




இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27%இட ஒதுக்கீடு உள்ளது.


தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்


இந்த தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும். CAT தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation. இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning. ஓவ்வொரு தேர்வு எழுத 70நிமிடங்கள் ஒதுக்கப்படும், மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15நிமிடம் தேர்வை பற்றி விளக்கப்படும்.


இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?


இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பொதுவாக எப்படி பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். இதற்க்காக பல்வேறு பயிற்சி மைய்யங்கள் தமிழகத்தில் உள்ளது,அங்கு சேர்ந்தும் பயிற்சி பெறலாம்.


இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு,காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்குஇத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறானசிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்கநம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்

Wednesday, August 17, 2011

லைலத்துல் கத்ர் இரவு

முன்னுரை:

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

1. சிறப்புகள்:

‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்’. (அல்குர்ஆன் 97:1-3)

சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.

2. அது எந்த இரவு?:

‘..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)

‘நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

‘லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

3. லைலத்துல் கத்ரை தேடுவது:

‘நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்’ இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

5. (இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:

‘நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்’. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

7. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي



பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!’

முடிவுரை:

லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!

Tuesday, August 9, 2011

எச்சரிக்கை - வீண் தர்க்கம் செய்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...


வீண் தர்க்கம் செய்தல்


ஹதீஸ் 1 :


”நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு, வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை” என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-அபூ உமாமா (ரலி)

-திர்மிதீ , இப்னுமாஜா





ஹதீஸ் 2 :


”ஒருவர் வீண் தர்க்கத்தை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் கீழ் பகுதியில் ஒரு வீடு கட்டித்தரப்படும்,ஒருவர் தகுதியானதாக இருப்பினும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் நடுவில் அவருக்காக வீடு கட்டப்படும். ஒருவர் தன் குணத்தை அழகாக்கி வைத்துக்கொண்டால் சொர்க்கத்தின் உயர்ப்பகுதியில் வீடு கட்டப்படும்.” என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-அபூ உமாமா (ரலி)
-அபூதாவூத் ,திர்மிதீ, இப்னுமாஜா,பைஹகீ


ஹதீஸ் 3 :


"அல்லாஹ்விடம் மனிதர்களில் அதிக கோபத்திற்குரியவர்கள் வீண் தர்க்கம் புரிவதில் கைதேர்ந்தவர்கள்தான் ”என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-ஆயிஷா (ரலி)

-புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ





ஹதீஸ் 4 :


"குர்ஆன் விஷயத்தில் தர்க்கம் புரிவது, இறை மறுப்புச் செயலாகும்.”என்று நபி(ஸல்) கூறினார்கள்.


-அபுஹீரைரா(ரலி)

-அபுதாவூத், இப்னுஹிப்பான்.







குறிப்பு : மேலும் விபரங்களுக்கு ஹதீஸ்களைப் பார்க்கவும்.

நாவைப் பேணுக!

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

Tuesday, August 2, 2011

நோன்பின் அவசியம்



ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

நோன்பின் நோக்கம்

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

நோன்பின் சிறப்பு

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ‘நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ

காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது

அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா

நோன்பு நோற்க கடமைபட்டவர்கள்,
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)

பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.

பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து ‘அருகில் வாரும்’ என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்

மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)

“இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்” என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்

மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்

கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா

சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நோயாளிகள், முதியவர்கள்

நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி

நோன்பின் நேரம்

சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.

ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)

ஸஹர் உணவு

நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ

(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

விடி ஸஹர்

விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.

பசி முன்னிற்கும்போது

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

மறதியாக உண்பதும், பருகுவதும்

ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்

வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்” என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம் நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் ‘இயலாது’ என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.

பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி ‘இதை தர்மம் செய்வீராக’ என்றனர். அதற்கவர் “எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே” என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா

குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது

நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

இரத்தம் குத்தி எடுத்தல்

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: தாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி நூல்கள்: புகாரி

மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நோன்பு துறத்தல்

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்

Friday, July 29, 2011

ஹலாலான உழைப்பின் சிறப்பு!

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)
ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)
உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)
பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)
உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :
நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.
சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.
நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்
நபி ஆதம்(அலை) அவர்கள் – விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்
நபி லூத்(அலை) அவர்கள் – விவசாயம்
நபி யஸஃ (அலை) அவர்கள் – விவசாயம்
நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்
நபி ஹாரூன்(அலை)அவர்கள் – வியாபாரம்
நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்
நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் – வேட்டையாடுதல்
நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்
நபி ஷுஐப்(அலை) அவர்கள் – ஆடு மேய்த்தல்
நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல
நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்
சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி
ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
செல்வத்தில் பரக்கத் இருக்காது.
கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.
எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)


இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)


ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.



ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:
நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.


ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37
ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)
ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)
M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை.


என்றும் அன்புடன்
MOHAMED IMRAN KHAN

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.




இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 27, 2011

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,

ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ?
என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா ? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.
இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35

தடையை மீறினார் வழி தவறினார்.

எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.

20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று
அந்த மரத்தின் கனி,
இன்று
மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

படிப்பினைகள்

ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்

உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.

ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.

நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறை யருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !

இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

· உலகம் முடியும் காலம் வரை,

· மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,

பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُون

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Monday, July 25, 2011

''புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்''



“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)
நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)
ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
- இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
- ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
- ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
- நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
மணமுடையது,
- இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்
ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:
1. தூய்மையான நோன்பு
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:
“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)
“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)
2. இரவு நேரத் தொழுகை
நபி (ஸல்) கூறினார்கள்:
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)
இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)
3. தருமம்
“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
“நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)
4. குர்ஆன் ஓதுதல்
ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
5.இஃதிகாஃப்
நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
6. உம்ரா
“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது
லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.
8. பாவமன்னிப்புக் கோருதல்
“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. ( அல்குர்ஆன் 51:18)
எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.
9.அனுமதிக்கப்பட்டவை
நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
-குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
- பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.
- உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (ஆதாரம்:அபூதாவூத்)
- எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். ( ஆதாரம்: அஹ்மத்)
- இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.
10.அனுமதிக்கப்படாதவை
- உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (அல்குர்ஆன் 2:187)
எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)
- இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)
- வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
11.சலுகையளிக்கப்பட்டவர்கள்
நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
( அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)
12.தடைசெய்யப்பட்டவர்கள்
மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்.




இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்

Wednesday, July 20, 2011

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ~நூல்:புகாரி, முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)
புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி” என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. ~அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி)

~நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன்.

~அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி)
~நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன்.

~அறிவிப்பவர்:மாலிக் (ரழி)
~நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்)

~அறிவிப்பவர்: அபூஹுரைரா
~நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.

~அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி)
~நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள்.

~அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
~நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ~அறிவிப்பவர்: அனஸ் (ரழி)

~நூல்:திர்மிதீ, அபூதாவூது.