
இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கின்றது. கடந்த இருபது நூற்றாண்டுகளில் மனித சமுதாயம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றது. மனிதன் பல சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் இதுவரை சந்தித்து வந்த சோதனைகளையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் இத்தகைய ஓர் ஆய்வை நிகழ்த்தியாக வேண்டும். அப்பொழுதுதான் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் பயின்று நேர்வழியில் நடக்க இயலும்.
கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகம் சந்தித்து வந்துள்ள பிரச்சினைகள் ஏராளம், ஏராளம். குறிப்பாக போர்களும், அதன் பாதிப்புகளும், சர்ச்சைகளும், அதன் தொடராக சவால்களும் என பல தலைப்புகள் ஆய்வுக்குரியனவாக இருந்தாலும், நாம் அவசியம் ஆய்வு செய்ய வேண்டிய வேறொன்று அதி முக்கியமானதாகும். அதுதான் அழைப்புப் பணி. இம்முக்கிய பணிகளத்தின் நிலை, மாறி வரும் காலச் சூழலில் எப்படியுள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அழைப்புப் பணியில் நாம் காட்டிய, காட்டிவரும் அலட்சியமே இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமுதாயம் சந்தித்து வரும் சொல்லொணாத் துன்பத்திற்கும், துயரத்திற்கும் அடிப்படையெனில் அது மிகையாகாது. இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைத்திட்ட மகத்தான அருட்கொடையே இஸ்லாம். இதனை இலகுவாகப் பெற்ற காரணத்தால் இஸ்லாத்தின் மகத்துவங்களை நம்மில் அநேகர் அறிந்துகொள்ளவில்லை.
இப்பெரும்பேறு பிறவியிலேயே கிடைக்கப் பெற்றதனாலோ என்னவோ, இந்த இறைத்தூதைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க பிரச்சாரம் செய்ய அதிகமானோர் முன்வரவில்லை.
ஆரம்பத்தில் கலாச்சார ரீதியாகவும், பின்னர் கல்வி ரீதியாகவும், ஊடுருவ ஆரம்பித்த ஆங்கிலேயர்கள், மேற்கத்தியவாதிகள் நாளடைவில் நமது சொல், செயல், சிந்தனை ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டனர். இவ்வாறு சிந்தனை அடிமைத்தனம் வேரூன்றியதன் விளைவாக இஸ்லாத்தை உலக விஷயங்களை விட்டும் அப்பாற்பட்ட ஒன்றாக முஸ்லிம்கள் கருதத் தலைப்பட்டனர்.
தவிர 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே முஸ்லிம்கள் தமது சொல், செயல், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்து விட்டனர் என்றே சொல்லலாம். அதுவரை நிலை பெற்றிருந்த உஸ்மானியப் பேரரசும் 1924 இல் வீழ்ச்சியடைந்ததுடன் எரிந்துகொண்டிருந்த ஒரேயொரு தீபமும் அணைந்து போனது. இஸ்லாமிய எதிரிகள் இவ்வாய்ப்பை வசமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை (அல்குர்ஆன் 2:253). கருத்துத் திணிப்பை இஸ்லாம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. கொள்கைகளைத் தெரிந்து, புரிந்து உணர்ந்து ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றுதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தின் இத்தகைய அழகான கருத்துக்களை சிதைத்து, வரலாறுகளை மாற்றியமைத்து இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்தது. அவர்கள் வளர்த்த தவறான கருத்துக்களும், துவேஷ உணர்வுகளும் இன்றும் நீடித்து வருவது கண்கூடு. ஆங்கிலேய ஆதிக்கத்துடன், அவர்களின் துர்ப்பிரச்சாரங்களுடன், முஸ்லிம்களின் அசட்டையும் சேர்ந்ததால்தான் இன்று வரை உலக முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ளனர்.
ஆதிக்க சக்திகளின் பிடிகளில் சிக்கித் தவிப்பதனாலேயே இன்றைய இழிநிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகி உள்ளனர். மேற்கத்திய உலகமோ இஸ்லாமிய சித்தாந்தத்தை சிதைத்து அழிப்பதிலும், இஸ்லாமிய வரலாறுகளை இருட்டடிப்புச் செய்வதிலும், முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி அழித்தொழிப்பதிலும் மன நிறைவு கொள்கிறது.
இன்றைய நவீன உலகில், நவீன சாதனங்களின் துணையோடு இத்தகைய நிலைப்பாடு வலுவடைந்து வரும் வேளையில், சூழ்ச்சிகளும் சதி வலைகளும் இன்டர்நெட் போன்ற வலைத்தளங்கள் வரை வளர்ந்து வரும் வேளையில் இஸ்லாமிய அடிப்படை கட்டமைப்பை வலுவுள்ளதாக ஆக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகின்றது.
எனவே முஸ்லிம்கள் என்ற வகையில் நம்மைப் பற்றி மற்ற சமூகங்களிடையே பரவியுள்ள தீய கருத்துக்களைத் துடைத்தெறிய வேண்டியது அவசியம் மாத்திரமல்லாமல் இஸ்லாத்திற்குள்ளும் பரவி விட்ட இஸ்லாத்திற்கு முரணான பல விஷயங்களிலிருந்து நமது முஸ்லிம் பெருமக்களை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம். எனவே, தூய இஸ்லாம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பி, இஸ்லாமிய சமுதாய மறுமலரச்சிக்கும், உலக சமாதானத்திற்கும் நமது பங்களிப்பைச் செய்வோமாக
No comments:
Post a Comment