125x125 Ads1

125x125 Ads1

Thursday, September 29, 2011

அழைப்புப் பணியின் முதற்படி التوحيد أولا يادعاة الإسلام!! (1)

அழைப்புப் பணி என்பது மிகவும் உன்னதமான புனிதமான பணியாகும். இப்பணி மிகவும் பரந்து, விரிந்த ஒரு களமாகும் என்று கூறினால் மிகையாகாது! இதன் வெற்றியே மார்க்கத்தின் வெற்றியாகும். எனவே, இப்பாரிய களத்தின் முதற்படி என்ன? இப்பணியை எங்கிருந்து, எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? போன்ற வினாக்களுக்குரிய விடைகளை அறிந்திருப்பது அழைப்பாளர்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான விடயமாகும்.
அப்போது தான் மிக, மிக முக்கியமான விடயத்துக்கு முதலில் அழுத்தம் கொடுத்து விட்டுப், பின்னர் அதற்கடுத்த படியான முக்கிய விடயத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும். பின்பு அதற்கடுத்த படியான நிலையில் உள்ள விடயத்திற்கு என படிப்படியாக அதற்கடுத்த படித்தரத்தில் உள்ள ஏனைய விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இவ்வாறு படிப்படியான முக்கியத்துவம் மிக்கவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அணுகுமுறையே தஃவாப் பணியின் சிறந்த முறையாகும் என்பதை அல்குர்ஆன், சுன்னாவிலும் நேர்வழி நடந்த நல்லோரது வழிமுறைகள் போன்றவற்றிலும் காணமுடிகின்றது.
நபிமார்கள் பலரின் சரிதைகளை அல்குர்ஆன் அழகான முறையில் எமக்குக் கற்றுத்தந்துள்ளது. அவர்கள் தமது சமுதாயத்தினருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களது அழைப்புப் பணியின் பாங்கு எப்படி அமைந்திருந்தது? முதலில் எதன்பால் மக்களை அழைத்தார்கள் போன்ற அனைத்தையுமே நபிமார்கள் பற்றி அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள கதைகளில் காணமுடிகின்றது. ஆம்! அவர்கள் அனைவருமே முதன்முதலில் தம் சமுதாயத்தினரை ஏகத்துவத்தின்பால் அழைத்துள்ளார்கள். அதன் பின்னரே தம் சமுதாயத்தில் காணப்பட்ட குறித்த தவறுகளை விட்டும் நீங்கி விடும்படி போதனை செய்துள்ளனர். கீழ்வரும் திருமறை வசனங்கள் அனைத்தும், நபிமார்களது தஃவாவின் முதற்படியாக ஏகத்துவக் கொள்கையின்பால் மக்களை அழைப்பதாகவே அமைந்திருந்தது என்பதைத் தெளிவு படுத்துகின்றன.
இவ்வகையில் இப்பணியின் முதற்படியாகத் திகழ்வது ஏகத்துவமாகும். அதாவது, ஓரிறைக் கொள்கையின்பால் மக்களை அழைப்பதாகும். அதாவது வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்பதே இக்கொள்கையின் அடிப்படையாகும். எனவே, சகல வணக்க, வழிபாடுகளையும் இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே செய்து, அவை அனைத்தினூடாகவும் அவன் ஒருவனையே ஓர்மைப் படுத்துவதாகும். எனவே, இம்மகத்தான கொள்கையின்பால் அழைப்பதே அனைத்தையும் விட முதன்மையானதாகும்.
لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
“நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (தம் கூட்டத்தாரிடம்) “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனை பற்றி அஞ்சுகிறேன்” என்று கூறினார். (அல்-அஃராஃப்: 59)
وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ إِنْ أَنتُمْ إِلاَّ مُفْتَرُونَ
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. (ஹூது: 50)
‘இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்.); அவர் தம் சமூகத்தாரிடம்: அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்.’ என்று கூறிய வேளையை (நபியே!) நினைவூட்டுவீராக! (அல்-அன்கபூத்: 16)
¨ நபி நூஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
¨ நபி ஹூத் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
¨ நபி ஸாலிஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ
“ஸமூது கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்.); அவர் (அவர்களை நோக்கி) ‘என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயன் இல்லை. (அல்-அஃராஃப்: 73)
¨ நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
¨ நபி யஃகூப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُواْ نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்: ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை – ஒரே நாயனையே – வணங்குவோம்; அவனுக்கே (முற்றிலும்) வழிபட்ட முஸ்லிம்களாக இருப்போம்.’ எனக் கூறினர். (அல்-பகரா: 133)
¨ நபி யூஸூப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَن نُّشْرِكَ بِاللّهِ مِن شَيْءٍ ذَلِكَ مِن فَضْلِ اللّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَشْكُرُونَ . يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللّهُ الْوَاحِدُ الْقَهَّارُ . مَا تَعْبُدُونَ مِن دُونِهِ إِلاَّ أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللّهُ بِهَا مِن سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ أَمَرَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ
‘நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா? ‘அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (வேறெவர்க்கும்) அதிகாரமில்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்கு) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால். மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை. (யூஸூஃப்: 38 – 40)
¨ நபி ஷுஐப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ
மத்யனி (நகரத்தி) லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களிடம் என்) சமூகத்தவர்களே, அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. (ஹூது : 84)
¨ நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
قَالَ أَغَيْرَ اللّهِ أَبْغِيكُمْ إِلَهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعَالَمِينَ
அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாகத் தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும் விட மேன்மையாக்கி வைத்துள்ளான்.’ என்றும் அவர் கூறினார். (அல்-அஃராஃப்: 140)
¨ நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தக்கீம் என்னும்) நேரான வழியாகும்.’ (ஆல இம்ரான்: 51)

Saturday, September 24, 2011

அழைப்புப் பணியின் அவசியம்


இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கின்றது. கடந்த இருபது நூற்றாண்டுகளில் மனித சமுதாயம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றது. மனிதன் பல சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் இதுவரை சந்தித்து வந்த சோதனைகளையும் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் இத்தகைய ஓர் ஆய்வை நிகழ்த்தியாக வேண்டும். அப்பொழுதுதான் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் பயின்று நேர்வழியில் நடக்க இயலும்.
கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகம் சந்தித்து வந்துள்ள பிரச்சினைகள் ஏராளம், ஏராளம். குறிப்பாக போர்களும், அதன் பாதிப்புகளும், சர்ச்சைகளும், அதன் தொடராக சவால்களும் என பல தலைப்புகள் ஆய்வுக்குரியனவாக இருந்தாலும், நாம் அவசியம் ஆய்வு செய்ய வேண்டிய வேறொன்று அதி முக்கியமானதாகும். அதுதான் அழைப்புப் பணி. இம்முக்கிய பணிகளத்தின் நிலை, மாறி வரும் காலச் சூழலில் எப்படியுள்ளது என ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அழைப்புப் பணியில் நாம் காட்டிய, காட்டிவரும் அலட்சியமே இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமுதாயம் சந்தித்து வரும் சொல்லொணாத் துன்பத்திற்கும், துயரத்திற்கும் அடிப்படையெனில் அது மிகையாகாது. இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைத்திட்ட மகத்தான அருட்கொடையே இஸ்லாம். இதனை இலகுவாகப் பெற்ற காரணத்தால் இஸ்லாத்தின் மகத்துவங்களை நம்மில் அநேகர் அறிந்துகொள்ளவில்லை.
இப்பெரும்பேறு பிறவியிலேயே கிடைக்கப் பெற்றதனாலோ என்னவோ, இந்த இறைத்தூதைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க பிரச்சாரம் செய்ய அதிகமானோர் முன்வரவில்லை.
ஆரம்பத்தில் கலாச்சார ரீதியாகவும், பின்னர் கல்வி ரீதியாகவும், ஊடுருவ ஆரம்பித்த ஆங்கிலேயர்கள், மேற்கத்தியவாதிகள் நாளடைவில் நமது சொல், செயல், சிந்தனை ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டனர். இவ்வாறு சிந்தனை அடிமைத்தனம் வேரூன்றியதன் விளைவாக இஸ்லாத்தை உலக விஷயங்களை விட்டும் அப்பாற்பட்ட ஒன்றாக முஸ்லிம்கள் கருதத் தலைப்பட்டனர்.
தவிர 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே முஸ்லிம்கள் தமது சொல், செயல், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்து விட்டனர் என்றே சொல்லலாம். அதுவரை நிலை பெற்றிருந்த உஸ்மானியப் பேரரசும் 1924 இல் வீழ்ச்சியடைந்ததுடன் எரிந்துகொண்டிருந்த ஒரேயொரு தீபமும் அணைந்து போனது. இஸ்லாமிய எதிரிகள் இவ்வாய்ப்பை வசமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை (அல்குர்ஆன் 2:253). கருத்துத் திணிப்பை இஸ்லாம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. கொள்கைகளைத் தெரிந்து, புரிந்து உணர்ந்து ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றுதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தின் இத்தகைய அழகான கருத்துக்களை சிதைத்து, வரலாறுகளை மாற்றியமைத்து இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்தது. அவர்கள் வளர்த்த தவறான கருத்துக்களும், துவேஷ உணர்வுகளும் இன்றும் நீடித்து வருவது கண்கூடு. ஆங்கிலேய ஆதிக்கத்துடன், அவர்களின் துர்ப்பிரச்சாரங்களுடன், முஸ்லிம்களின் அசட்டையும் சேர்ந்ததால்தான் இன்று வரை உலக முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ளனர்.
ஆதிக்க சக்திகளின் பிடிகளில் சிக்கித் தவிப்பதனாலேயே இன்றைய இழிநிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகி உள்ளனர். மேற்கத்திய உலகமோ இஸ்லாமிய சித்தாந்தத்தை சிதைத்து அழிப்பதிலும், இஸ்லாமிய வரலாறுகளை இருட்டடிப்புச் செய்வதிலும், முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி அழித்தொழிப்பதிலும் மன நிறைவு கொள்கிறது.
இன்றைய நவீன உலகில், நவீன சாதனங்களின் துணையோடு இத்தகைய நிலைப்பாடு வலுவடைந்து வரும் வேளையில், சூழ்ச்சிகளும் சதி வலைகளும் இன்டர்நெட் போன்ற வலைத்தளங்கள் வரை வளர்ந்து வரும் வேளையில் இஸ்லாமிய அடிப்படை கட்டமைப்பை வலுவுள்ளதாக ஆக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகின்றது.
எனவே முஸ்லிம்கள் என்ற வகையில் நம்மைப் பற்றி மற்ற சமூகங்களிடையே பரவியுள்ள தீய கருத்துக்களைத் துடைத்தெறிய வேண்டியது அவசியம் மாத்திரமல்லாமல் இஸ்லாத்திற்குள்ளும் பரவி விட்ட இஸ்லாத்திற்கு முரணான பல விஷயங்களிலிருந்து நமது முஸ்லிம் பெருமக்களை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம். எனவே, தூய இஸ்லாம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பி, இஸ்லாமிய சமுதாய மறுமலரச்சிக்கும், உலக சமாதானத்திற்கும் நமது பங்களிப்பைச் செய்வோமாக

Saturday, September 10, 2011

நல்லதை ஏவி தீயதைத் தடுத்தல்.

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்” என்றார்கள். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்துவிழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.
புஹாரி :3267 அபூவாயில் (ரலி).

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6069 அபூஹுரைரா (ரலி).

Friday, September 9, 2011

உண்மையான இறைநம்பிக்கையாளராக


'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?

* முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல்.
* நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல்
* நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல்.
* நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.

* நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும் உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
* நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
* நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல் செயல்படுத்துதல்.
* நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட நேசம் கொள்ளல்.
* நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை விட்டும் தூரமாகுதல்.
* நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் கடைப்பிடித்தல்.
* நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
* நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்
* நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
* நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
* நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும் குடும்பத்தாரையும் மதித்தல்.
* நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கேட்டல்.
* நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
* நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை விட்டு விடுதல்
* நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
* நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு- பேசுவதை கண்டித்தல்.
* நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
* நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
* நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு எத்திவைத்தல்.
* நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
* நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.